திருவண்ணாமலை சம்பவத்தில் ஏடிஎம் கொள்ளையர்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்களுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டது. திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் ஆகிய இடங்களில் கடந்த 12ம் தேதி 4 ஏடிஎம்களை காஸ் வெல்டிங் மெஷின் மூலம் உடைத்து ₹72.79 லட்சத்தை கும்பல் கொள்ளையடித்தது. இதுதொடர்பாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 5 மாவட்ட எஸ்பிக்கள் கொண்ட 9 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர். இதுதொடர்பாக ஹரியானா மாநிலத்தை சேர்ந்த முகமதுஆரிப்(35), ஆசாத்(37), கர்நாடக மாநிலம் கோலார் மகாலட்சுமி லேஅவுட் பகுதியை சேர்ந்த குர்தீஷ்பாஷா(43), அசாம் மாநிலத்தை சேர்ந்த அஷ்ரப்உசேன்(26) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் இந்த கொள்ளையில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகள் குறித்த தகவல்களை பெறுவதற்காவும் பதுக்கியுள்ள ₹70 லட்சத்தை பறிமுதல் செய்வதற்காகவும் கொள்ளை கும்பலின் தலைவனான முகமதுஆரீப், ஆசாத் ஆகியோரை கடந்த 22ம் தேதி மாஜிஸ்திரேட் கோர்ட் அனுமதியுடன் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தபோது கொள்ளைக்கான சதி திட்டம் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஹரியானாவில் பதுக்கியுள்ள ₹70 லட்சம் குறித்த விபரமும் தெரிய வந்தது. அந்த பணத்தை மீட்க தனிப்படையினர் முகாமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், கோர்ட் அனுமதித்த 7 நாட்கள் அவகாசம் முடிந்த நிலையில் திருவண்ணாமலை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று மீண்டும் முகமதுஆரீப், ஆசாத் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும், வரும் 14ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் கவியரசன் உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் இருவரையும் வேனில் அழைத்து சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: