×

குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஸ்ரீரங்கத்தில் மேலும் ஒரு புதிய ஆழ்துளை கிணறு-மாநகராட்சி கூட்டத்தில் மேயர் தகவல்

திருச்சி : திருச்சி மாநகராட்சிக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஸ்ரீரங்கம் மேலூரில் மேலும் ஒரு புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்படும் என நேற்று நடந்த கூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசினார்.திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, ஆண்டாள் ராம்குமார், ஜெய நிர்மலா, நகர பொறியாளர் சிவபாதம், மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி செயற்பொறியாளர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கூட்டம் துவங்குவதற்கு முன்பாக தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது. தொடர்ந்து, கூட்டம் தொடங்கியதும் மேயர் அன்பழகன் பேசுகையில், 70வது பிறந்த நாள் கொண்டாடும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனைத்து உறுப்பினர்களும் தங்களின் வாழ்த்துகளை பதிவு செய்யலாம். திருச்சி மையப்பகுதியாக இருப்பதால் சிறந்த மாநகராட்சியாக திருச்சியை உருவாக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தி உள்ளார் என்றார். அதனையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனைத்து கவுன்சிலர்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை மேஜையை தட்டி தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு;-லட்சுமி தேவி (திமுக): எனது 1வது வார்டில் எதிர்பார்த்த அளவில் பணிகள் முடியவில்லை. சாலைகள் குண்டும்குழியுமாக உள்ளது. அடிக்கடி பேட்ஜ் பணிதான் நடக்கிறது. எனது வார்டுக்குட்பட்ட பகுதியில் ஒருபிரிவினற்குரிய சுடுகாடு பணி முடியவில்லை. ஸ்ரீரங்கம் பகுதிக்கு மேல்நிலை பள்ளி வேண்டும்.

மேயர் அன்பழகன்: கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சிக்கு பின்னர் நாம் பொறுப்பேற்ற போது நிதி ஆதாரம் எப்படி இருந்தது தெரியும். படிப்படியாக பணிகள் நடந்து வருகிறது. கடந்த ஆட்சியில் அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்தது. தற்போது அனைத்து பொறியாளர்களையும் ஒருங்கிணைத்து கமிஷனர் சிறப்பாக பணி செய்து வருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திருச்சி மாநகராட்சியில் மேலும் 35 பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அம்பிகாபதி: (மாநகராட்சி அதிமுக தலைவர்)ஏர்போர்ட் வயர்லெஸ் சாலையில் சாலைகள் மோசமாக உள்ளது. கோடை காலம் வந்துவிட்டது. எனது வார்டில் குடிநீர் பிரச்சினை ஏற்படும் வாய்ப்புள்ளது. திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட 400 கிலோமீட்டர் சாலையில் 300 கிலோ மீட்டர் சாலை போடப்பட்டதாக தாங்கள் சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் எனது வார்டில் சாலைகள், பாதாள சாக்கடை பணிகள் நிறைவுற்று இருக்கிறது. இதில் இதுவரை நான்கு சாலைகள் கூட தார் ரோடு போடவில்லை. அப்படி என்றால் 300 கிலோ மீட்டர் சாலையும் மேற்கு தொகுதியில் தான் போட்டு இருக்கிறீர்களா?

இவ்வாறு அவர் பேசவும், திமுக கவுன்சிலர்கள் முத்துச்செல்வம், கமால் முஸ்தபா, புஷ்பராஜ், நாகராஜ் உள்ளிட்ட திமுக கவுன்சிலர்கள் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுடன் கோட்டத் தலைவர்கள் துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன் உள்ளிட்டவர்களும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் கூச்சல்- அமளி நிலவியது.

முத்துசெல்வம் (திமுக): அனைத்து வார்டுக்கும் (அதிமுக வார்டு உள்பட) தலா ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பட்ஜெட் தயாரித்தது திமுக ஆட்சியில் தான்.மேயர் அன்பழகன் : அம்பிகாபதி வார்டுக்கும் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது அவருக்கும் தெரியும். அதிமுக ஆட்சியில் வார்டு பணி்க்கு நிதி பெறுவது கடினம். வரும் ஜூன் மாதத்திற்குகள் 848 கிமீ சாலைகள் போடப்படும். பாரபட்சம் இல்லாமல் பணிகள் நடந்து வருகிறது. அம்பிகாபதி பேசியது கண்டிக்கதக்கது. அவர் பேசியது அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்றார்.

தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் அம்பிகாபதி, அரவிந்தன், அனுசியா அனைவரும் வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியே சென்றனர்.அதன்பின்னர் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்புக்கு பின் விவாதம் தொடர்ந்து நடந்தது.மேயர் அன்பழகன்: அம்பேத்கர் சிலை மூடி திறக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த திமுக ஆட்சியின் போது 39 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் எந்த பணிகளும் நடக்கவில்லை. குடிநீர் பிரச்னையை போக்கும் வகையில் ஸ்ரீரங்கம் மேலூரில் புதிய ஆழ்துளை கிணறு ஒன்று அமைக்கப்பட உள்ளது.

அப்பீஸ் முத்துக்குமார் (மதிமுக): திருவானைக்காவல் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலை சுற்றி கழிப்பிட வசதிகள் இல்லை. இதனால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கோவிலை சுற்றி கழிப்பிடங்கள் அமைக்க வேண்டும்.ஜவகர் (காங்கிரஸ்): காலை உணவு திட்டம் விரிவு படுத்திய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்ரீரங்கம் பகுதியில் நடந்து வரும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஸ்ரீரங்கம் பஸ் நிலையத்தையும் உடனடியாக கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீரங்கம் தைத்தேரோடும் சாலையில் கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும். உத்திர வீதியில் இரண்டு கழிப்பிடங்களை கட்ட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காஜாமலை விஜய் (திமுக): மாநகராட்சியில் ஒப்பந்த பணிகள் சிண்டிகேட் முறையில் நடக்கிறது. ஒருவருக்கே ஒப்பந்தம் பணி வழங்கப்படுகிறது. இது தவறானது. எனது வார்டில் எந்த பணியும் நடக்கவில்லை. அண்ணா ஸ்டேடியம் பகுதியில் நீருற்று அமைக்கப்பட்டது பொதுமக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. இதுபோல் அனைத்து பகுதிகளிலும் அமைக்க வேண்டும். எனது வார்டு பகுதியில் நுண்உரம் செயலாக்க மையம் அமைக்க வேண்டும். மாநகரில் பிடிக்கப்படும் மாடுகளை ஒப்பந்ததாரர் மிரட்டி பணம் பறிக்கிறார். பணம் தரவில்லை என கூறி பிடிக்கப்பட்ட மாட்டின் காலை உடைத்துள்ளார். அவருடைய ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

மேயர் அன்பழகன் : ஒப்பந்ததாரர் தவறு செய்திருந்தது உண்மை என்றால் ஒப்பந்த உரிமம் ரத்து செய்யப்படும். தொடர்ந்து மாநகரில் 5 மண்டலங்களிலும் மாடு பிடிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார். தொடர்ந்து விவாதங்கள் நடந்தது. அதனை தொடர்ந்து, நடந்த மாநகராட்சி கூட்டத்தில் 59 பொருட்கள் மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பார்வையாளர் மாடம் திடீர் மூடல்

திருச்சி மாநகராட்சி கூட்ட அரங்கில் கவுன்சிலர்கள் இருக்கைக்கு பின்புறம் பார்வையாளர்களுக்கான பார்வையாளர் மாடம் உள்ளது. இந்த மாடத்தில் பொதுமக்கள் அமர்ந்து மாநகராட்சி கூட்டத்தை கண்டு களிப்பது வழக்கம். நேற்று நடந்த கூட்டத்தின் போது, பார்வையாளர் மாடம் பூட்டப்பட்டிருந்தது குறித்து திமுக கவுன்சிலர் முத்துசெல்வம் கேள்வி எழுப்பினார். இதற்கு மேயர் அன்பழகன் பதிலளித்து பேசுகையில், பார்வையாளர் மாடம், புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாடத்தினை உயரப்படுத்தி பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் அமைக்கப்பட இருப்பதால் பூட்டப்பட்டுள்ளது என்றார்.

Tags : Srirananga ,mayor , Trichy : One more bore well will be constructed at Srirangam Melur to meet the drinking water requirement of Trichy Corporation.
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட்...