நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி இயற்கை விவசாயம் ஊக்குவிக்கும் தமிழ்நாடு அரசு

*வேளாண் அறிவியல் நிலையம் மூலம் விலையில்லா உரம், விதைகள் வழங்கல்

மதுரை : தமிழ்நாடு அரசின் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நஞ்சில்லா காய்கறிகள் சாகுபடி செய்ய தேவையான பயிற்சிகளையும், இடு பொருட்களையும் மதுரை வேளாண் அறிவியல் நிலையம் மூலம் இலவசமாக வழங்கி வருவது விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இயற்கை விவசாயம் என்பது தொன்று தொட்ட காலம் முதலே நம்மிடையே இருந்து வந்த ஒன்றாகும். இடைப்பட்ட காலங்களில் இயற்கை முறையில் விவசாயம் செய்வது என்பது நம்மால் மறக்கப்பட்ட நிலையில் இன்று பெரும்பாலானோர் இயற்கை விவசாயம், இயற்கை உணவு என இயற்கையை நோக்கி திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த 40 ஆண்டுகளாக இயற்கை நெறிமுறைகளைக் கடைபிடிக்காமல் ரசாயன மருந்துகளை அதிக அளவில் உபயோகித்து வருகிறோம்.

இதன் விளைவாக தற்சமயம் விளைச்சல் பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் நிலத்தின் உற்பத்தி திறனும் குறைந்து, நீரும் மாசுபட்டுள்ளது. எனவே நமது விவசாய முறைகளையும் இயற்கை சார்ந்த விவசாயம் முறைகளாக படிப்படியாக மாற்றிக் கொள்ள வேண்டும்.சுழற்சி முறை: அனைத்து விதமான பயிர்களை வளர்ப்பதற்கு ஏற்றவாறு நிலத்தை தயார் செய்வது இயற்கை விவசாயத்தின் முதற்படியாகும். எனவே நிலத்தை நன்கு உழுது மண்ணை பஞ்சு போல மிருதுவாக மாற்ற வேண்டும்.

விவசாயிகள் விளை நிலங்களில் ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான பயிர் வகைகளை சாகுபடி செய்வதை தவிர்த்து சுழற்சி முறையில் பயிர்களை தேர்வு செய்து சாகுபடி செய்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும். உதாரணமாக தக்காளி பயிரிடும் நிலத்தில் ஆண்டு முழுவதும் தக்காளி பயிரிடாமல் அடுத்து எள், நிலக்கடலை, சோளம் போன்றவற்றை பயிர் செய்துவிட்டு அடுத்து வாழை அறுவடை முடிந்த பின்னர் மறுபடியும் காய்கறிகளை பயிர் செய்யலாம்.

இவ்வாறு இல்லாமல் ஒரே மாதிரியான பயிரினை தொடர்ந்து பயிர் செய்வதால் நிலமானது தனது வளத்தினை இழக்கிறது. எனவே பயிர் சுழற்சி முறையில் பயிர் செய்வதன் மூலம் நிலம் இழந்த வளத்தினை மீட்டெடுக்கிறது. பயிர் செய்யும் நிலத்தின் தன்மை நீரின் அளவு ஆகியவற்றுக்கு ஏற்ப பயிர் சுழற்சி முறையை மேற்கொள்ளலாம்.

இயற்கை உரம்:ஊட்டச்சத்து மேலாண்மையில் உயிர் உரங்களை பயன்படுத்துவது நீர் மற்றும் மண் வள மேம்பாட்டிற்கு மிகவும் அவசியம். ஆனால் பரிந்துரைக்கப்பட்ட அங்கக உர அளவினை விவசாயிகள் மண்ணில் இடுவது இல்லை. பரிந்துரைக்கப்படும் தொழுஉரத்துடன் உயிர் உரத்தினை கலந்து ஊட்டமேற்றி மண்ணில் இடுவதால் பயிர்களுக்கு சத்துகள் எளிதில் கிடைப்பதோடு மண்ணின் கனிமவளமும் கூடுகிறது. இயற்கை உரங்களில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, சுண்ணாம்பு, மக்னீசியம் போன்ற பேரூட்ட சத்துகள் கிடைக்கின்றன. மண்ணிலுள்ள இரும்பு, தாமிரம் மற்றும் துத்தநாகம் போன்ற நுண்ணூட்டச் சத்துக்கள் இயற்கை எருவுடன் இணைந்து பயிரின் வேர்கள் உறிஞ்சுவதற்கேற்ற சத்தாக மாறுகின்றன.

பசுந்தாள் உரம்: பசுந்தாள் பயிர்களை பயிரிட்டு அதனை அப்படியே மடக்கி நிலத்தில் உழும் முறை தொன்று தொட்டு அனைவரும் அறிந்த முறையாகும். நெல் வயலில் அகத்தி, சணப்பை மற்றும் கொழிஞ்சி போன்றவை பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் தோட்ட நிலங்களில் சணப்பை, கொழிஞ்சி, சூபாபுல் போன்றவை பயிரிடலாம். பசுந்தால் பயிர்களை மண்ணிலிடும்போது தழைச்சத்தை வெகுவாக கொடுக்கிறது.

மேலும் அவை மட்கும்பொழுது உற்பத்தியாகும் கரிம அமிலங்களின் வினையால் மண்ணில் பயிருக்கு கிடைக்கும் துத்தநாகச் சத்து அதிகரிக்கிறது. முக்கியமாக களர்நிலங்களில் இந்த வினை பயிருக்கு உதவுகிறது.ஒவ்வொரு தாவரத்திற்கும் உயிர்நாடி என்பது விதையாகும். விதைகளை தேர்ந்தெடுக்கும் பொழுது தரமான நாட்டு விதைகளை தேர்ந்தெடுத்து இயற்கை முறையில் வேளாண் செய்வதன் மூலம் அதிகமான விளைச்சலுடன் தரமான பொருட்களை அனைவருக்கும் வழங்க முடியும்.

மதுரை வேளாண் அறிவியல் நிலைய நீர்வள நிலவள திட்ட பொறுப்பாளர் கிருஷ்ணகுமார் கூறுகையில், ‘‘நீர்வளத்தை பாதுகாத்து மாசற்ற நீரை தக்க வைத்தல், இயற்கைச் சூழல் மாசுபடாமல் காத்தல் உணவு நஞ்சாவதை தடுத்து உயிரினங்களை பாதுகாத்தல், மண்ணின் மலட்டுத் தன்மையை நீக்கி பொன் விளையும் பூமியாக மாற்றுதல், சுற்றுச்சூழலுக்கும் உயிரினங்களுக்கும் கேடு ஏற்படாமல் தடுத்து இயற்கை உரங்களின் மூலம் சாகுபடி செய்வதே இயற்கை விவசாயம் ஆகும்.

மதுரையில் விவசாயிகள் இயற்கை விவசாயம் குறித்த சந்தேகங்களுக்கு பயிற்சியுடன் ஆலோசனைகளை மதுரை வேளாண் அறிவியல் நிலையம் அளித்து வருகிறது. மேலும் தமிழ்நாடு அரசின் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நஞ்சில்லா காய்கறிகள் சாகுபடி செய்ய தேவையான பயிற்சிகளையும், இடு பொருட்களையும் மதுரை வேளாண் அறிவியல் நிலையம் மூலம் இலவசமாக வழங்கி வருகிறது’’ என்றார்.

சந்தேகம் இருக்கா? டயல் பண்ணுங்க

இயற்கை விவசாயம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு மதுரை வேளாண் அறிவியல் நிலையத்தை 98652-87851 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணில் தொடர்பு கொண்டு விவசாயிகள் தங்கள் சங்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

மண்புழு எரு தயாரிக்கலாம்

தென்னை மட்டையிலிருந்து கயிறு திரிந்த பின் கிடைக்கும் தென்னை கழிவு தமிழ்நாட்டில் சுமார் 8 லட்சம் டன் அளவு கிடைக்கின்றது. இதில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, சுண்ணாம்பு சத்து, மெக்னீசியம் போன்றவை உள்ளன. மேலும் நுண்ணூட்டச் சத்துக்களான துத்தநாகம், தாமிரம், இரும்பு ஆகியவை கணிசமான அளவில் இருக்கின்றன. மண்ணின் அமைப்பில் மண்புழுக்கள் மிகப்பெரிய அங்கம் வகிக்கின்றன. மண்புழுக்கள் அதிகம் இருக்கும் பண்ணையில் விவசாயிகள் எளிதாக மண்புழு எருவை தயாரிக்கலாம். மண்ணில் வாழும் நுண்ணுயிர்களின் செயலால் மண்ணின் இயல் அமைப்பு பெரிதளவு மேம்படுகிறது.

Related Stories: