பாஜ கிளை அலுவலகமாக ஆளுனர் மாளிகையை பயன்படுத்துகிறார்: கவர்னர் மீது முத்தரசன் தாக்கு

திருவாரூர்: ஆளுனர் மாளிகையை பாஜ கிளை அலுவலகமாக ஆளுனர் பயன்படுத்தி வருகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். திருவாரூரில் முத்தரசன் அளித்த பேட்டி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும் மதசார்பின்மைக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதுடன் ஆர்எஸ்எஸ் கொள்கைக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். ஆளுநர் மாளிகையை பாஜ கிளை அலுவலகமாக பயன்படுத்தி வருகிறார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட், ஆன்லைன் மோசடி உள்ளிட்ட 21 சட்ட மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

ஜன சங்க தலைவர் எழுதிய புத்தகத்தை ஆளுநர் மாளிகையில் வெளியிட்டதுடன் உலக மாமேதை என்று அழைக்கப்படும் காரல் மார்க்ஸ் குறித்து தவறான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ஆளுநரின் இந்த போக்கை கண்டிப்பதுடன் தனது தரம் தாழ்ந்த பேச்சுக்களை நிறுத்தி கொள்ள வேண்டும். அவ்வாறு நிறுத்தாவிட்டால் அவர் செல்லும் இடமெல்லாம் தொடர் போராட்டம் நடத்தப்படும். இதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு அவரே பொறுப்பாவார். இவ்வாறு கூறினார்.

Related Stories: