உதடு, அண்ணப்பிளவு சிகிச்சையை ஊக்குவிக்க கனடா தொண்டு நிறுவனத்துடன் பாலாஜி மருத்துவக் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: உதடு மற்றும் அண்ணப்பிளவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு விரிவான சிகிச்சையை வழங்குவதில் இந்தியாவிலுள்ள மருத்துவப் பணியாளர்களின் திறனை உயர்த்துவதற்காக குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் கனடா நாட்டை சேர்ந்த ஒரு அறச்செயல் அமைப்பான டிரான்பார்மிங் பேசஸ், பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்படி, டிரான்ஸ்பார்மிங் பேசஸ் என்ற அமைப்பின் வலையமைப்பும், பாலாஜி மருத்துவக் கல்லூரியின் அண்ணப்பிளவு மற்றும் மண்டையோடு சீரமைப்பு மையமும் இணைந்து செயல்படும். இதுகுறித்து பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் குணசேகரன் கூறியதாவது:  உதடு மற்றும் அண்ணப்பிளவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் விரிவான சிகிச்சையை ஊக்குவித்து, முழுமையான மறுவாழ்வை பெறவும், சமூகத்தில் கண்ணியம் மிக்கவர்களாக இடம்பெறவும் உதவி வரும் டிரான்ஸ்பார்மிங் பேசஸ் என்ற அறச்செயல் அமைப்பின் வலையமைப்பில் ஒரு அங்கமாக இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

இந்தியாவில் அவர்களது நம்பிக்கைக்குரிய மருத்துவக் கல்வி மற்றும் சேவை நிறுவனங்களுள் ஒன்றாக எங்களை தேர்வு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த ஒப்பந்த நடவடிக்கை மூலம் உதடு மற்றும் அண்ணப்பிளவு சிறப்பு மருத்துவர்களின் உலகளாவிய வலையமைப்பு சேவைகளை பெரும் வாய்ப்பை எமது அண்ணப்பிளவு மற்றும் மண்டையோடு சீரமைப்பு மையம் பெறும். இதன்மூலம் அண்ணப்பிளவு சிகிச்சைக்கான செயல் உத்திகள் மற்றும் சிகிச்சைகளை இன்னும் சிறப்பாக உருவாக்கவும் மற்றும் செயல்படுத்தவும் இயலும். இவ்வாறு அவர் தெரிவித்தார். டிரான்ஸ்பார்மிங் பேசஸ் செயலாக்க இயக்குனர் ஹ்யூ ப்ரூஸ்டர் கூறுகையில், பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் அதன் உதடு மற்றும் மண்டையோடு சீரமைப்பு மையத்தைச் சேர்ந்த துடிப்பான மருத்துவக் குழுவினரால் செய்யப்பட்டு வரும் சிறப்பான பணியையும், சேவையையும் பெரிதும் பாராட்டுகிறோம். இம்மையத்துடன் இணைந்து செயல்படுவதன் மூலம் இந்தியாவில் அண்ணப்பிளவுக்கான சிகிச்சையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் செயல் நடவடிக்கையை ஆவலோடு எதிர்நோக்குகிறோம். வசதியற்ற குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு பாதுகாப்பான, புத்தாக்கமான மற்றும் சான்றுகள் அடிப்படையிலான விரிவான அண்ணப்பிளவு சிகிச்சை சேவைகளை வழங்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,’’ என்றார்.  

Related Stories: