×

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை

சென்னை: பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் நடப்பாண்டிற்கான பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள், மார்ச் மாதம் 13ம் தேதி துவங்கி, ஏப்ரல் மாதம் 20ம் தேதி நிறைவடைகிறது. குறிப்பாக, பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 13ம் தேதி தேர்வு தொடங்கி ஏப்ரல் மாதம் 3ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதேபோல், பிளஸ் 1 மாணவர்களுக்கு மார்ச் 14ம் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் 5ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்வு தொடங்கி, அதே மாதம் 20ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தலைமையில், பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக அனைத்து துறைக்கான ஆயத்த கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இதில், மாநகர காவல் துறை, மாவட்ட வருவாய் அலுவலர், மின்சார வாரியம், மாநகர போக்குவரத்து கழகம், தீயணைப்பு மீட்பு பணிகள் துறை மற்றும் சென்னை மாநகராட்சி குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது, பொதுத் தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடுகள், தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கான பேருந்து வசதி, மின்சார வசதி, தேர்வு அறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் தேர்வுகள் எவ்வித புகார்களுக்கும் இடமில்லாமல் சிறப்பாக நடைபெறவும்  துறை அலுவலர்களுக்கு அறிவுரைகளை கலெக்டர் அமிர்த ஜோதி வழங்கினார். இன்று முதல் வருகிற 9ம் தேதி வரை பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் இரண்டு சுற்றுகளாக நடைபெற உள்ளன. சென்னை மாவட்டத்தில் சுமார் 47,000 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வினையும், சுமார் 48,000 மாணவர்கள் பிளஸ் 1 தேர்வினையும் எழுத உள்ளனர். மாணவர்கள் சிறப்பான முறையில் இந்த தேர்வுகளை எழுதுவதற்கு தேவையான ஆலோசனைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், கல்வி அலுவலர், சென்னை மாநகராட்சி, மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை மற்றும் தனியார் பள்ளிகள்) மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Tags : Collector consultation with all department officials regarding Plus 2 and Class 10 public examination
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்