×

சென்னையில் அமலுக்கு வந்தது சிக்னலில் எல்லைக்கோட்டை தாண்டினால் ரூ.500 அபராதம்: விதிமீறலில் ஈடுபட்ட 3,702 வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை

சென்னை: சென்னையில் போக்குவரத்து சிக்னல்களில் எல்லைக்கோட்டை தாண்டி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கும் முறையை மாநகர போக்குவரத்து போலீஸ் அமல்படுத்தியுள்ளது. சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள சிக்னல்களில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளால் தான் அதிகமாக போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

அதைதொடர்ந்து மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர் உத்தரவுப்படி சென்னை மாநகரம் முழுவதும் உள்ள முக்கிய சிக்னல் சந்திப்புகளான அண்ணா சாலை, தேனாம்பேட்டை, வேப்பேரி, சென்ட்ரல், கோயம்பேடு, ஓஎம்ஆர் சாலை, அடையாறு, திருவான்மியூர் என 150 சிக்னல்களில் நேற்று அதிகாலை முதல் போக்குவரத்து போலீசார், விதிகளை மீறி சிக்னல் விழுவதற்கு முன்பு வாகனம் இயக்குபவர்கள், திருப்பம் இல்லாத இடத்தில் திரும்புதல், இரு சக்கர வாகனத்தில் 3 பேர் சவாரி செய்தல், ஒழுங்கற்ற முறையில் சிக்னல்களில் அமைக்கப்பட்டுள்ள எல்லைக்கோட்டை தாண்டி வாகனம் நிறுத்திய வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதேநேரம், அனைத்து சிக்னல்களில் ஒலிபெருக்கி மூலம் போக்குவரத்து விதிகள் குறித்து போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். அப்படி இருந்தும், பல வாகன ஓட்டிகள் விதிகளை மீறி வாகனங்கள் இயக்கி வருகின்றனர். அவர்களை சிக்னல்களில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் அடையாளம் கண்டு அவர்களுக்கு ரசீது அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள 150 முக்கிய சிக்னல்களில் எல்லைக்கோட்டை தாண்டி வாகனத்தை நிறுத்தியவர்களை வீடியோ மற்றும் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு மொத்தம் 3,702 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் அபராதமாக தலா ரூ.500 வசூலிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளை போன்று சாலை விதிகளை முறையாக கடைபிடிக்கும் வகையில் மாநகர போக்குவரத்து காவல்துறை இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் இருந்து அதிகளவில் வரவேற்பு பெற்றுள்ளது. வாகன ஓட்டிகள் சிக்னல்களில் எல்லைக்கோட்டிற்குள் தங்களது வாகனங்கள் முறையாக நிறுத்தினால், எதிர் திசையில் இருந்து வரும் வாகனங்கள் எந்த சிரமங்களுமின்றி எளிமையாக கடந்து செல்ல ஏதுவாக உள்ளது. இதனால் சிக்னல்களில் ஏற்படும் வாகன விபத்துகளும் தடுக்கப்படுகிறது.

முதற்கட்டமாக, சென்னையில் 150 சிக்னல்களில் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு வாகன ஓட்டிகளிடம் அதிகளவில் வரவேற்பு இருப்பதால் மாநகரில் மீதமுள்ள முக்கிய சாலை சந்திப்புகள், இணைப்பு சாலைகள் என 380க்கும் மேற்பட்ட சிக்னல்களில் எல்லைக்கோட்டிற்குள் வாகனங்களை நிறுத்தும் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. அதற்கான எல்லைக்கோடுகள் அமைக்கும் பணிகள், சிசிடிவி கேமராக்கள் அமைப்புக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்க கட்டாயம் ஹெல்மெட் அணிவது, பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் நபர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிவது, 3 பேர் இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்வது, சிக்னல்களில் விதிமீறல்கள் என சென்னை மாநகர போலீஸ் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனால் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டுகள் விபத்து எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக மாநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். அதேபோல், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது எடுக்கப்பட்டு வரும் கடுமையான நடவடிக்கையால் இரவு நேரங்களில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : Chennai , Rs 500 fine for crossing border at signal comes into force in Chennai: Action against 3,702 motorists involved in violation
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!