சென்னை: பிறந்தநாள் கொண்டாடும் முதல்வர் முக.ஸ்டாலினின் புகழ் பணிகள் அகிலமெங்கும் ஓங்கி வருகிறது என தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை உயர்நிலை ஆலோசனைக்குழு உறுப்பினர் மு.பெ.சத்தியவேல் முருகனார் வாழ்த்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: எப்போதுமே தமிழனின் சிந்தனையும் சொல்லும் உயர்வாகவே இருக்கும் அதனால் தான் பாரதியார் ‘‘சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே’’ என்று பாடினார். தமிழில் அரசியல் என்பது உயர்ந்தது. ஆனால் ஆங்கிலத்தில் அவர் ‘‘ பாலிடிக்ஸ்’’ பண்ணிட்டார் சார் என்று சொல்கிறான். அங்கே பாலிடிக்ஸ் என்ற கெடுதலான பொருளில் கூறப்படுகிறது. அதேபோல, வள்ளுவர் அரசியல் என்றே ஓர் இயலைப்பாடி அரசிற்கு இலக்கணத்தை வகுக்கிறார். இதில் வள்ளுவர் எந்த கட்சியை சேர்ந்தவர்? ஆக, கட்சி அரசியல் வேறு, கருத்தியல் அறங்கூர் அரசியல் வேறு. எனக்கு ஓட்டு போடாதவர்களும் இவருக்கு ஓட்டுப்போடாமல் போய்விட்டோமே என்று எண்ண வேண்டும் என்பது அறங்கூர் அரசியல். அப்படி கூறி செயலாற்றி வருபவர் தற்போதைய தமிழ்நாடு அரசு முதல்வர். வள்ளுவரும், அவர்வழி அறச்சான்றோர்களும் மனம் மகிழ்வது திண்ணம். எந்தச்சமயமும் கடவுள் நீதியற்றவர் என்று கூறுவதில்லை. ஏன்? நீதியற்றவன் கடவுள் ஆக மாட்டான்; ஆனால் நீதியாளனோ கடவுளின் பிரதிநிதி என்கிறார் வள்ளுவர்.
‘‘முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப்படும் - குறள்
அவன் இறையன்று; ஆனால் அவன் இறை என்று வைக்கப்படும் என்றதனால் அவன் இறைவனின் பிரதிநிதி என்றார். முறை என்ற சொல் இங்கே நீதியைக்குறித்தது. அப்படி ஒரு பிரதிநிதி தமிழ்நாட்டிற்கு இப்போது கிடைத்திருக்கிறார்.
அந்த நீதி எது? அது தான் சமூக நீதி; அது இறைவனிடமிருந்து தொடங்க வேண்டும். அதற்கு தமிழ்நாட்டில் ஒரு வரலாறு இருக்கிறது. அது இறைவன் திருக்கோயில் சந்நிதிகளிலிருந்து தொடங்க வேண்டும் என்றார் பெரியார். இறைவன் ஒருவன் தான் என்று தானே எல்லோரும் சொல்கிறார்கள்? எனில் இருக்கிற ஒருவனுக்கு எப்படி சாதி வரும்? சாதி என்பது ஒரு கூட்டம் அல்லவா?. மதம் என்பது இறைவனை அடைவது எப்படி என்று கூறுவது. ஆனால் மதத்திற்கும் இறைவனுக்கும் எப்படி தொடர்பு வர முடியும்? மதத்தை இறைவன் உருவாக்கினார் என்றால் அவனுக்கு மேலே ஒரு இறைவன் இருக்கிறான் என்று ஆகிவிடாதா? அப்புறம் கடவுள் ஒருவனே என்பது பொய்யாகி விடாதா? எனவே சாதியோ மதமோ இறைவனுக்கு இல்லை, இருக்க முடியாது. இருந்தாலும், இறைவன் சந்நிதியில் மட்டும் இவை எப்படி நுழைந்தன? எனவே தான் ‘‘சாதியிலே மதங்களிலே அபிமானித்து அலைகின்றீர்’’ என்று வள்ளலார் பாடினார்; இல்லை சாடினார். அதுவே என் கருத்து என்று பெரியார் வள்ளலாரின் ஆறாம் திருமுறையைத் தானே பதிப்பித்து வெளியிட்டார்.
இருந்தும், சந்நிதிகளில் சாதியும் மதமும் சலங்கை கட்டிக்கொண்டு ஆடியது; ஆடி வருகிறது. குப்பையோ குப்பை இதனை அகற்ற வேண்டும் என்பது தான் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்! இதற்கு ‘‘நான்’’ என்று மார்த்தட்டிக்கொண்டு தனது அரசியல் கலைஞர் உரிய அரசாணை இட்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றார். ஆனால் சாதி உச்சநீதிமன்றம் வரை சென்று கொச்சைக்கூக்குரல் இட்டது. அந்த உச்சநீதிமன்றம் வரை சென்று, வேறாட்சியின் போது நடந்த இறுதி விசாரணையில், அரசு வழக்கறிஞர் ஒளிந்து வராத போது, அடிச்சிறியேன் தனி நின்று இணை வாதுரை செய்து எனது சிறிய பங்கை ஆற்றினேன். கலைஞரின் அரசாணை செல்லும் என்ற தீர்ப்பு வந்தது.
அப்புறம் என்ன? அதை நடைமுறைப்படுத்த வேண்டியது தானே? அதுதான் இல்லை; அந்த வேறாட்சி இதற்கு மாறாட்சி. எனவே, அப்போதும் சாதி சதி செய்து தடுத்துக்கொண்டு நின்றது; சதிக்குக்கால் முளைத்தது தானே சாதி!
இதற்கு எப்போது விடியல்? அதுவும் வந்தது. இன்றைய தமிழ்நாட்டின் முதல்வர் ‘‘துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு’’ என்று துணிவுடன் 20க்கும் மேற்பட்ட அரசு பயிற்சி பெற்ற அனைத்து சாதி அர்ச்சகர்களை பணியமர்த்தம் செய்து வழிகோலிவிட்டார். தமிழ்த்தாய் நெஞ்சார வாழ்த்தினாள் காரணம், பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் நீங்கி விட்டது. ஆனால் முள்ளின் முனை எங்கேயோ ஒளிந்து நீதிமன்றங்களில் அறமில்லா கொரில்லாப்போர் ஆற்றி வருகிறது. கவலையில்லை; மேலே இருக்கிறவன் பார்த்துக்கொள்வான். நான் இன்றைய தமிழக முதல்வரைச் சொல்கிறேன்.
குறிப்பாக, அண்மையில், அறநிலைத்துறையில் 108 நூல்கள் வெளியீட்டில் என்னைச்சிறப்பித்த போது ‘‘தமிழ்நாடு’’ என்று பெயர்க்காக வீறுடன் போராடி வெற்றி பெற்றமைக்காக முதல்வரை ‘‘தமிழ் வீறுடையார்’’ என்று விருது பெயர் வழங்கிப்பாராட்டினேன். அத்தகைய முதல்வருக்கு பிறந்தநாள். நல்லாட்சி செய்த அரசர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுவது தமிழ்மரபு.
‘‘சிறந்த நாளினிற் செற்றம் நீக்கிப்
பிறந்த நாள்வாயின் பெருமங் கலமும்’’
என்று தொல்காப்பியம் இதைத் தெரிவிக்கிறது. இதனை பெருமங்கல நாள் என்று கல்வெட்டுகள் பலவும் பதிவு செய்திருக்கின்றன. அத்தமிழ் மரபுப்படி, தமிழ்நாட்டு அரசு இன்றைய முதல்வரின் பெருமங்கல நாளில் அவரது புகழும் புகழ்பணிகளும் அகிலமெங்கும் ஓங்குவதாக என்று வாழ்த்தி அமைகின்றேன். இவ்வாறு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
