என்னுடைய பணியை உங்களுக்காக நிறைவேற்ற காத்திருக்கிறேன்: பள்ளியில் நடந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: என்னுடைய பணியை உங்களுக்காக நிறைவேற்ற காத்திருக்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி நேற்று சென்னையில், சிறுமலர் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர் மேல்நிலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது: எனக்கு நாளை (இன்று) 70வது பிறந்தநாள். நான் பல நேரங்களில் சொல்வதுண்டு, ஆண்டுக்கு 2 முறை, 3 முறை பிறந்தநாள் வரக்கூடாதா, வந்தால் அடிக்கடி உங்களை வந்து பார்க்கலாமே. அந்த வாய்ப்பு கிடைக்குமே என்று பலமுறை ஏங்கியதுண்டு.

ஆனால் அப்படி வந்தால் வயது அதிகமாகி கொண்டே இருக்கும். எது எப்படி இருந்தாலும், உங்களை சந்திக்கும் போதெல்லாம் எனக்கு பெரிய மகிழ்ச்சியான உணர்வு, இங்கே வாழ்த்துகளை மட்டும் அல்ல, இங்கே வரவேற்புரை ஆற்றியபோதும் சரி, எனக்கு வாழ்த்து சொன்னபோதும் சரி, கலை நிகழ்ச்சிகள் மூலமாக பாடல்கள் ஒலித்த நேரத்திலும் சரி, நீங்கள் வாழ்த்து மட்டும் அல்ல, ஏறக்குறைய 22 மாதங்களாக நடந்து கொண்டு இருக்கக்கூடிய நம்ம ஆட்சி, நான் என்னுடைய ஆட்சி என்று சொல்ல மாட்டேன், நம்முடைய ஆட்சி, உங்கள் ஆட்சி, அந்த ஆட்சியில் செய்து கொண்டிருக்கக்கூடிய சாதனைகளை எல்லாம் பட்டியல் போட்டீர்கள், ஓ நாம் இவ்வளவு செய்திருக்கிறோமா என்று எனக்கே வியப்பாக இருக்கிறது.

அந்த அளவிற்கு நீங்கள் அதை எல்லாம் நினைவுப்படுத்தி, வரிசைப்படுத்தி, மனதில் வைத்துக் கொண்டு, நாங்கள் மறந்தாலும், நீங்கள் மறக்காமல், இங்கே சுட்டிக்காட்டியதை நான் எப்படி கருதுகிறேன் என்றால், இன்னும் நிறைய செய்ய வேண்டும், இன்னும் உங்களுடைய பாராட்டை பெற வேண்டும் என்று எண்ணுகிறேன். அப்படிப்பட்ட ஒரு ஆட்சியை, உங்களுடைய நம்பிக்கைக்கு ஏற்ற வகையிலே நாம் இங்கே நடத்திக் கொண்டு இருக்கிறோம். இன்னும் ஒரு செய்தியை கூட அடிக்கடி சொல்வதுண்டு. நான், இந்த பள்ளிக்கு பல பொறுப்புகளில் இருந்து வந்திருக்கிறேன்.

1984ம் ஆண்டில் இருந்து வந்து கொண்டு இருக்கிறேன் என்றால், எம்.எல்.ஏ.வாக வந்திருக்கிறேன், சென்னை மாநகர மேயராக வந்திருக்கிறேன், உள்ளாட்சி துறை அமைச்சராக வந்திருக்கிறேன், துணை முதலமைச்சராக இருந்த போதும் வந்திருக்கிறேன், எதிர்கட்சி தலைவராகவும் வந்திருக்கிறேன், இன்றைக்கு முதலமைச்சராக வந்து கொண்டிருக்கிறேன். ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லிக் கொள்கிறேன். எந்த பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், எப்போதும் வருவேன், எல்லா ஆண்டும் வருவேன், அந்த பாசம் எனக்கு உங்களிடம் இருக்கிறது, இந்த சிறுமலர் பள்ளியை பொறுத்தவரைக்கும் நான் அந்த பாசத்தை பெற்றிருக்கிறேன்.

நான் எத்தனை பொறுப்புகளில் இருந்தாலும், எத்தனை நிகழ்ச்சிகளுக்கும் சென்றாலும், அது அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அல்லது பொதுவான நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதிலே கிடைக்கின்ற சிறப்பைவிட, அதிலே கிடைக்கின்ற பெருமையைவிட, அதிலே கிடைக்கின்ற மகிழ்ச்சியைவிட, இங்கே வருகிறபோதுதான் அதிகமான பூரிப்பை, மகிழ்ச்சியை பெறுவதுண்டு. அந்த வகையிலே தான் நீங்கள் தெரிவித்திருக்கக்கூடிய வாழ்த்துகளை, உற்சாகத்தை உங்களுடைய நம்பிக்கையை என்றும் மனதில் வைத்துக்கொண்டு, என்னுடைய பணியை உங்களுக்காக நிறைவேற்ற காத்திருக்கிறேன், தயாராக இருக்கிறேன். மீண்டும் உங்களுடைய அன்பான வாழ்த்துகளுக்கு ஈடு இணை எதுவும் கிடையாது, அதை யாரும் மறுக்க முடியாது, அப்படி ஈடு இணையற்ற உங்களுடைய வாழ்த்துகளை பெற்ற நான், மீண்டும் உங்கள் எல்லோருக்கும் என்னுடைய இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் ஆயிரம்விளக்கு தொகுதி எம்எல்ஏ டாக்டர் எழிலன், மாவட்ட திமுக செயலாளர் சிற்றரசு, பகுதி செயலாளர்கள் அன்புதுரை, நுங்கை ராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், முதன்மை அருட்சகோதரி டோமினிக் மேரி, சிறுமலர் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர் மேல்நிலை பள்ளி வளாக இயக்குநர் சவேரியா, பள்ளி தாளாளர் மெர்சி ஏன்ஜிலா, சிறுமலர் பார்வை குறைபாடுடையோர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை பெர்பைன், சிறுமலர் செவித்திறன் குறைபாடுடையோர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை ஜெசிந்தா ரோஸ்லின், சிறுமலர் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர் மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள் மற்றும் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: