சென்னை: தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு கடத்தப்பட இருந்த 3,500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் சமீபத்தில் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக, கலைச்செல்வி உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கலைச்செல்வி மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி எஸ்.அல்லி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் ரேஷன் கடையில் பில் கிளார்க் ஆக பணிபுரிகிறார்.
இந்த கடத்தலுக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை. முதல் தகவல் அறிக்கையில் மனுதாரர் பெயர் இல்லை என்று வாதிட்டார். அரசு தரப்பில் மாநகர அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு 19 ஆயிரத்து 775 ரூபாய் மதிப்புள்ள மூன்றரை டன் ரேஷன் அரிசியை மனுதாரர் மற்றவருடன் இணைந்து கடத்த முயற்சித்துள்ளார். அப்போது லாரி, அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மனுதாரரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டியுள்ளதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அரசி கடத்தலில் ஈடுபட்ட கலைச்செல்வியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
