×

மாணவி மரணத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியை முழுமையாக திறக்கலாம்: உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி கடந்தாண்டு ஜூலை மாதம் பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் காரணமாக பள்ளி மூடப்பட்டது. பள்ளியை மீண்டும் திறக்க அனுமதிக்கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஐந்தாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பள்ளியை திறக்க அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பண்ணன் ஆஜராகி, தற்போது அமைதியான சூழல் நிலவுகிறது என்று கூறி கலெக்டரின் அறிக்கையை தாக்கல் செய்தார். பள்ளி நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சாம்ராட், எல்.கே.ஜி. முதல் நான்காம் வகுப்பு வரை பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். வழக்கை விசாரித்த நீதிபதி, மார்ச் முதல் வாரத்திலிருந்து எல்.கே.ஜி. முதல் நேரடி வகுப்புகளுடன் பள்ளியை முழுமையாக திறக்கலாம். பள்ளியின் ஏ பிளாக் கட்டிடத்தின் மூன்றாவது மாடி பூட்டி சீல் வைக்கப்பட்ட உத்தரவு தவிர, இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட மற்ற அனைத்து இடைக்கால உத்தரவுகளையும் நீக்கப்படுகிறது. பள்ளியை திறப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது. பள்ளி நிர்வாகம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை 12 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.

Tags : Kallakurichi , Kallakurichi school closed due to student's death can be fully reopened: High Court allows
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்