×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்துக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: 15 சுற்றுகளாக நாளை வாக்கு எண்ணிக்கை

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. இதையொட்டி, வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்காக, 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், 1,430 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 310 விவிபேட் கருவிகள், 286 கட்டுப்பாட்டு கருவிகள் பயன்படுத்தப்பட்டன. 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண்கள், 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 25 பேர் என மொத்தம் உள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்களில், நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்குப்பதிவில் 82 ஆயிரத்து 138 ஆண்கள், 88 ஆயிரத்து 37 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்தனர். இது 74.79 % வாக்குப் பதிவு ஆகும். இது, கடந்த தேர்தலை விட 7.97% அதிகமாகும்.

வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வேட்பாளர்களின் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் சித்தோடு ஐ.ஆர்.டி.டி.பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்குள்ள வைப்பறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டன. இத்தேர்தலில், 77 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கையின்போது கால தாமதத்தை தவிர்க்க 2 அறைகளில் வாக்கு எண்ணும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி, தரைத்தளத்தில் உள்ள அறையில் 10 மேஜைகளும், முதல் தளத்தில் உள்ள அறையில் 6 மேஜைகளும் என மொத்தம் 16 மேஜைகள் வாக்கு எண்ணிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மேஜையிலும் ஒரு நுண்பார்வையாளர் உள்பட 3 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியை மேற்கொள்ள உள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ``ஸ்ட்ராங் ரூம்” முழுவதும் வெப் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த கேமராக்கள் அனைத்தும் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் மையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு, பவானி தீயணைப்புதுறையினர் 40 பேரும் சுழற்சி முறையில், 24 மணி நேரமும் தயார் நிலையில் பணியில் உள்ளனர். நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 15 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதைத்தொடர்ந்து, இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். காலை 10 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியவரும்.

* அதிகபட்சம் 92.89% குறைந்தபட்சம் 45.37%
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிகபட்சமாக 38வது வாக்குசாவடியில் 92.89 சதவீத வாக்குகளும், இதற்கு அடுத்தபடியாக 78வது வாக்குசாவடியில் 91.25 சதவீத வாக்குகளும், 219வது வாக்குசாவடியில் 89.38 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக 237வது வாக்குசாவடியில் 45.37 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது. மொத்தமுள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்களில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்துள்ளனர். 57 ஆயிரத்து 355 பேர் வாக்களிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* கூடுதல் வாக்குகள் பதிவான 15% வாக்குசாவடிகளில் ஆய்வு - கலெக்டர் தகவல்
வாக்கு எண்ணிக்கை மையத்தை தேர்தல் பார்வையாளர் ராஜ்குமார் யாதவ், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன்பின், கலெக்டர் கூறியதாவது: ஓட்டுப்பதிவின் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2 வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றி உள்ளோம். பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். 16 டேபிள்களில் ஓட்டு எண்ணப்படும். 238 ஓட்டுச்சாவடிக்கான இயந்திரங்கள் 15 சுற்றில் எண்ணி முடிக்கப்படும். ஓட்டு எண்ணும் பணியில் 100க்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். ஒரு டேபிளில் மட்டும் வி.வி.பேட் எடுத்து வந்து ஒன்றிரண்டு எண்ணப்படும். சராசரி ஓட்டுப்பதிவுக்கு மேல் எத்தனை ஓட்டுச்சாவடியில் கூடுதல் வாக்குகள் பதிவாகி உள்ளது என்பதை கணக்கிட்டு, அதில் 15 சதவீத வாக்குசாவடிகளில் ஆய்வு  செய்யப்படும். தபால் ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கும். அதன்பிறகு 8.30க்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். 16 டேபிள் உள்ளதால் 15 சுற்றில் எண்ணப்படும். 77 வேட்பாளர்கள் உள்ளதால் முடிந்த வரை விரைவாக முடிக்கப்படும். கடந்த 2021 தேர்தலை விட கூடுதலாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதற்கு காரணம் தேர்தல் ஆணையம் ஏற்படுத்திய விழிப்புணர்வு ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

* தபால் வாக்குகள் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு சீல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அரசு ஊழியர்கள், 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் செலுத்திய தபால் வாக்குகள் அனைத்தும் தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குபெட்டிகள் அனைத்தும் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டு பிரித்து எண்ணப்படுகிறது. இந்நிலையில், தபால் வாக்கு பெட்டிகள் அனைத்தும், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரின் அறையில் வைக்கப்பட்டுள்ளதால் அவரது அறை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

Tags : Erode East , 5 layers of police security for Erode East by-election counting centre: Counting of votes in 15 rounds tomorrow
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...