×

நேபாள அரசுக்கு 3 கட்சிகள் ஆதரவு வாபஸ்: அமைச்சரவையை மாற்றியமைக்க பிரதமர் பிரசண்டா முடிவு

காத்மண்டு: நேபாளத்தில் ஆளும் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 3 கட்சிகள் வாபஸ் பெற்றதால், அமைச்சரவையை மாற்றி அமைக்க பிரதமர் பிரசண்டா முடிவு செய்துள்ளார். நேபாளத்தில் சிபிஎன் மாவோயிஸ்ட் கட்சி தலைவர் புஷ்ப கமல் தஹால் பிரசண்டா தலைமையில் ஏழு கட்சிகளின் கூட்டணி ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. அங்கு வரும் மார்ச் 9ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும், எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராம் சந்திர பவுடேலுக்கு பிரதமர் பிரசண்டா தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.  ஆளும்கட்சியின் கூட்டணிக் கட்சியான சிபிஎன்-யுஎம்எல் கட்சியை சேர்ந்த சுபாஷ் நெம்யாங்க் அதிபராக போட்டியிடும் நிலையில், எதிர்க்கட்சி வேட்பாளருக்கு பிரசண்டா ஆதரவு தெரிவித்தது கூட்டணிக் கட்சியினரிடையே அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது.


பிரதமரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் சிபிஎன் மாவோயிஸ்ட் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக ராஷ்ட்ரிய பிரஜாதந்திர கட்சி(ஆர்பிபி) அறிவித்தது. ஆர்பிபி கட்சியை சேர்ந்த துணைப்பிரதமர் ராஜேந்திர லிங்டன் உள்ளிட்ட 4 அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இரண்டாவது பெரிய கட்சியான கே.பி.சர்மா தலைமையிலான சிபிஎன்-யுஎம்எல் கட்சியும், ரவி லாமிசேனே தலைமையிலான ராஷ்ட்ரிய சுதந்திர கட்சியும்(ஆர்எஸ்பி) பிரசண்டா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றுள்ளன.  பிரசண்டா பிரதமராக நீடிப்பதற்கு 138 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தற்போது 141 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதால் பிரசண்டாவின் பிரதமர் பதவிக்கு ஆபத்து இல்லை. அதேசமயம், காலியாக உள்ள அமைச்சர்களின் பதவிக்கு புதியவர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு 2 கட்சிகள் கடிதம்

இதனிடையே, அதிபர் தேர்தலில் நேபாள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராம் சந்திர பவுடேலுக்கு வாக்களிக்கும்படி அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் நேபாள காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. இதேபோல், சிபிஎன்-யுஎம்எல் கட்சி வேட்பாளர் சுபாஷ் நெம்யாங்க்-க்கு வாக்களிக்கும்படி சிபிஎன்-யுஎம்எல் கடிதம் எழுதியுள்ளது.

Tags : Nepal government ,Prasanda , 3 parties withdraw support to Nepal government: Prime Minister Prasanda decides to reshuffle the cabinet
× RELATED வெளிநாட்டினர் எவரெஸ்ட் ஏற கட்டணம் ரூ12 லட்சம்: நேபாள அரசு ஆலோசனை