பொருளாதாரத்தில் இந்தியா முதலிடம் பிடிக்கும்: குடியரசு துணைத் தலைவர் பேச்சு

சென்னை: கடந்த ஆண்டு உலகின் பொருளாதார நாடுகளில்  இந்தியா 3வது இடத்தில் இருந்தது. விரைவில் அது மேலும் முன்னேறி முதலிடத்துக்கு வரும் என்று இந்திய குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்தார். முதல்முறையாக தமிழ்நாட்டுக்கு வந்த இந்திய குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப்தன்கர், சென்னை ஐஐடி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்டுள்ள புத்தாக்க வசதி மையத்தை நேற்று திறந்த வைத்தார். சங்கர் மற்றும் சுதா புத்தாக்க மையம் என்ற பெயரில் கட்டபட்டுள்ள இந்த மையம், முன்னாள் மாணவர்களின் பங்களிப்புடன் புதிய கண்டுபிடிப்புகள், புத்தாக்க நிறுவனங்கள் தொடங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த புத்தாக்க மைய கட்டிடத்தை சென்னை ஐஐடியில் 1981ம் ஆண்டு படித்த மாணவரும் தொழில் நிறுவனருமான சங்கர் 30 கோடி செலவில் கட்டிக் கொடுத்துள்ளார். இந்த புதிய கட்டிடத்தை இந்திய குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் நேற்று திறந்து வைத்து பேசியதாவது:  வளர்ந்து வரும் நாடுகளிடையே நமது நாடும் நமது பொருளாதாரமும் சந்தேகத்துக்கு இடமின்றி வளர்ந்து வருகிறது. 2022 செப்டம்பர் மாத அளவில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வந்தது. விரைவில் நாம் மூன்றாவது இடத்தை பிடிப்போம் என்பது உறுதி. என்முன் இருக்கும் உங்களைப் போன்றவர்களால் 2047ல் நாம் முன்னணியில் இருப்போம் என்பதும் உறுதி.

இந்தியாவின் வளர்ச்சி தொய்வின்றி வளர்ந்துகொண்டே இருக்கும். தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் அழுத்தமான ஒரு சூழ்நிலை நிலவினாலும்  இந்தியாவின் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது. நமது நாடு வாய்ப்புகளை தருகின்ற இடமாகவும், முதலீடுகளையும் வாய்ப்புகளையும் உலகளவில் வழங்குவதற்குரிய  இடமாக இருக்கிறது. இந்தியர்களின்  சிறந்த சிந்தனை மற்றும்  ஆற்றல்  உலகை வழிநடத்தும். நான் மாநிலங்கள் அவையின் தலைவராக இருக்கிறேன். அந்த அவையை கலைக்க முடியாது என்பது அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.  நம் முன்னோர்கள், இந்த அவையை எந்த பிரச்னைகளும் இல்லாமல் நடத்தி வந்தனர். ஆனால் தற்போது விவாதங்கள் என்ற பெயரில் கூச்சல் குழப்பம் நிலவுகிறது. வரி செலுத்துவோரின் கோடிக்கணக்கான ரூபாய் வரியில் நாடாளுமன்றம் இயங்குகிறது.இதுபோன்ற  அவையில் நடக்கும் நிகழ்வுகளை மாணவர்கள் சமூக வலை தளங்களில்  எடுத்துச் சென்று  மக்களிடம் சேர்க்க வேண்டும்.  

இவ்வாறு குடியரசு துணைத் தலைவர் பேசினார். அதைத் தொடர்ந்து ஐஐடி மாணவர்களுடன் கலந்துரையாடும் போதும் கூறியதாவது: இந்தியாவின் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்று சொல்லும்போது பலர் சிரித்தனர். நாம் அதை நோக்கிநகர்ந்து வருகிறோம். விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கியுள்ளோம். இன் பல நாடுகள் உணவுப் பாதுகாப்பை நோக்கி நகர்கின்றன. ஆனால் நமக்கு அந்த அவசியம் தற்போது ஏற்படாமல் வளர்ந்து வருகிறோம்.  தொழில் தொடங்குவது நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்யும். மாணவர்கள் தோல்விகளை கண்டு துவளாமல், மன அழுத்தத்தை  பொருட்படுத்தாமல்  இலக்கை நோக்கி முன்னேறுங்கள். மாணவர்கள் தொழில் தொடங்கும் போது அவர்களுக்கு ஏற்ற யோசனைகளின்  அடிப்படையில் புதுமையாக தொடங்குங்கள். இலக்கை நோக்கி முன்னேறுங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றார்.

Related Stories: