×

வெலிங்டன் டெஸ்ட் போட்டி 1 ரன் வித்தியாசத்தில் நியூசி. த்ரில் வெற்றி: * இங்கிலாந்து ஏமாற்றம் * தொடர் சமனில் முடிந்தது

வெலிங்டன்: இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில் நியூசிலாந்து 1 ரன் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றியை வசப்படுத்தியதால், தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. மவுன்ட் மவுங்கானுயி மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 267 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 1-0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில் 2வது டெஸ்ட் பிப்.24ம் வெலிங்டனில் தொடங்கியது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 435 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ஹாரி புரூக் 186, ஜோ ரூட் 153 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து, முதல் இன்னிங்சில் 209 ரன்னுக்கு சுருண்டு ஃபாலோ ஆன் பெற்றது. 2வது இன்னிங்சில் கடுமையாகப் போராடிய நியூசிலாந்து 483 ரன் குவித்து சவால் விடுத்தது. லாதம் 83, கான்வே 61, வில்லியம்சன் 132, டேரில் மிட்செல் 54, பிளெண்டல் 90* ரன் விளாசினர். இங்கிலாந்து தரப்பில் ஜாக் லீச் 5 விக்கெட் அள்ளினார். இதைத் தொடர்ந்து, 258 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 4ம் நாள் முடிவில் 1 விக்கெட்  இழப்புக்கு 48 ரன் எடுத்திருந்தது. பென் டக்கெட் 23, ஆலிவர் ராபின்சன் 1 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

டக்கெட் 33, ராபின்சன் 2, போப் 14, ஹாரி புரூக் (0, ரன் அவுட்) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து 80 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து சரிவை சந்தித்தது. ஜோ ரூட் - கேப்டன் ஸ்டோக்ஸ் இணைந்து 6வது விக்கெட்டுக்கு 121 ரன் சேர்க்க, இங்கிலாந்து வெற்றியை நெருங்கியது. ஸ்டோக்ஸ் 33 ரன், ரூட் 95 ரன் (113 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி வேக்னர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுக்க, ஆட்டம் எதிர்பாராத வகையில் விறுவிறுப்பானது. இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை பதற்றம் பற்றிக்கொள்ள பிராடு 11, போக்ஸ் 35 ரன் எடுத்து வெளியேறினர்.வெற்றிக்கு இன்னும் 2 ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், ஆண்டர்சன் (4 ரன்) வேக்னர் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பிளெண்டல் வசம் பிடிபட... இங்கிலாந்து 256 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 1 ரன் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றியை வசப்படுத்திய நியூசிலாந்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து அசத்தியது. நியூசி. பந்துவீச்சில் வேக்னர் 4, சவுத்தீ 3, ஹென்றி 2 விக்கெட் வீழ்த்தினர். வில்லியம்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். தொடர் நாயகன் விருதை இங்கிலாந்தின் ஹாரி புரூக் தட்டிச் சென்றார்.

* தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 2021ல் வென்ற நியூசிலாது, 6 டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு மீண்டும் வெற்றியை ருசித்துள்ளது.

* இந்தியாவுக்கு எதிராக 2021-22ல் நடந்த டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இழந்த நியூசிலாந்து, அதன் பிறகு ஒரு தொடரைக் கூட வெல்லவில்லை. வங்க தேசம், தென் ஆப்ரிக்காவுடன் டிரா செய்த நியூசி. அணி 2022ல் இங்கிலாந்து சென்று விளையாடியபோது ஒயிட் வாஷ் ஆனது. அதன் பிறகு  பாகிஸ்தானுக்கு எதிராகவும், இப்போது இங்கிலாந்துக்கு எதிராகவும் தொடரை டிரா செய்துள்ளது.

Tags : Wellington ,Zealand ,England , Wellington Test match New Zealand by 1 run. Thrill win: * England disappointed * Series ended in a draw
× RELATED மகளிர் டி20 உலககோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு