×

3வது டெஸ்ட் இன்று தொடக்கம் ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்ற இந்தியா முனைப்பு: ஸ்மித் தலைமையில் பதிலடி தருமா ஆஸி.?

இந்தூர்: இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 3வது டெஸ்ட், இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் இன்று காலை 9.30க்கு தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள ஆஸி. அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாக்பூர் மற்றும் டெல்லியில் நடந்த முதல் 2 டெஸ்டிலும் அபாரமாக வென்ற இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் பார்டர்-கவாஸ்கர்  கோப்பையை தக்கவைத்துக் கொண்டது. இந்நிலையில், 3வது டெஸ்ட் இந்தூரில் இன்று தொடங்குகிறது. இந்திய அணி கோப்பையை தக்கவைத்துக் கொண்டாலும், தொடரை வெல்ல வேண்டும் என்றால் இன்னொரு வெற்றி தேவைப்படுகிறது. அது 3வது டெஸ்டிலேயே சாத்தியப்பட்டால் சிறப்பாக அமையும். கூடவே ஐசிசி உலக  டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் பைனலுக்கு முன்னேறுவதையும் உறுதிப்படுத்த முடியும். ஆல் ரவுண்டர்கள் அஷ்வின், அக்சர், ஜடேஜாவின் பங்களிப்பே இந்திய அணியின் முக்கிய துருப்புச்சீட்டாக அமைந்துள்ளது. ஷமி, சிராஜ் வேகமும் பந்துவீச்சு கூட்டணியை பலமானதாக உருவாக்கி உள்ளது. தொடர்ந்து சொதப்பி வரும் துணை கேப்டன் ராகுலுக்கு பதிலாக இளம் வீரர் ஷுப்மன் கில் இடம் பெறும் வாய்ப்பு உள்ளது.

இந்திய அணியில் மாற்றம் இருக்கிறதோ இல்லையோ... ஆஸி அணியில் மாற்றம் நிச்சயம். உடல்நிலை பாதித்துள்ள அம்மாவை உடனிருந்து கவனித்துக் கொள்வதற்காக கேப்டன் கம்மின்ஸ் நாடு திரும்பிவிட்டார். அதனால் ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். காயம் காரணமாக ஹேசல்வுட், வார்னர் விலகியதும் ஆஸி. அணிக்கு பின்னடைவை கொடுத்த நிலையில் கேமரான் கிரீன், மிட்செல் ஸ்டார்க் வரவால் ஸ்மித் & கோ உற்சாகம் + நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை வெல்ல இந்தியாவும், பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியாவும் வரிந்துகட்டுவதால் இந்த டெஸ்டில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்தியா: ரோகித் (கேப்டன்), கே.எல்.ராகுல், ஆர்.அஷ்வின், ஸ்ரீகர் பரத், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் அய்யர், ஜடேஜா, கோஹ்லி, குல்தீப், ஷமி, சிராஜ், அக்சர், புஜாரா, ஷுப்மன் கில், ஜெய்தேவ் உனத்கட், சூரியகுமார், உமேஷ். ஆஸ்திரேலியா: ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி,  கேமரான் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷேன், மேத்யூ குனேமன், நாதன் லயன், லேன்ஸ் மோரிஸ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா, மிட்செல் ஸ்டார்க்.

*  இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய 104 டெஸ்டில், ஆஸி. 43 - 32 என முன்னிலை வகிக்கிறது. 28 டெஸ்ட் டிராவில் முடிந்துள்ளன. சென்னையில் நடந்த ஒரு டெஸ்ட் சரிசமனில் (‘டை’) முடிந்தது குறிப்பிடத்தக்கது.

* இதுவரை மோதிய 27 டெஸ்ட் தொடர்களில் 12ல் வென்று  ஆஸி. முன்னிலையில் உள்ளது. இந்தியா 10 தொடர்களில் வென்றுள்ளது. எஞ்சிய 5 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன.

* 2016க்கு பிறகு நடந்த  இரு தரப்பு தொடர்களில் ஒன்றில் கூட ஆஸி. வென்றதில்லை. தொடர்ந்து 3 தொடர்களை வென்றுள்ள இந்தியா இப்போது 4வது தொடரை வெல்லும் வாய்ப்பில் உள்ளது.



Tags : India ,Aussies ,Smith , 3rd Test starts today with hat-trick win for India: Will Aussies respond under Smith?
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!