×

தேங்காய் விலை சரிவு: நிலையான விலை நிர்ணயம் செய்ய வேண்டும்: அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

வருசநாடு: கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, குமணந்தொழு, மூலக்கடை, முத்தாலம்பாறை, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தியாகும் தேங்காய் காங்கேயம், திருச்சி, பாண்டிச்சேரி, சென்னை மட்டுமல்லாமல் டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடமலை-மயிலை ஒன்றியத்தில் தொடர் கனமழை பெய்தது. அதன் காரணமாக தற்போது கடமலை-மயிலை ஒன்றியத்தில் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளது. உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக கடந்த சில நாட்களாக தேங்காய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 12 ரூபாய்க்கு விற்பனையான தேங்காய், தற்போது ரூ.8க்கு விற்பனையாகிறது. தேங்காய் தரம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. விலை குறைவுக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தேங்காய் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதும் காரணம் என தேங்காய் வியாபாரிகள் கூறுகின்றனர். எனவே கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள தேங்காய் விவசாயிகளுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் தேங்காய்க்கு நிலையான விலை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Govt , Decline in coconut prices: Fixed price should be fixed: Farmers' demand to Govt
× RELATED மின்சார தேவைக்காக தனியார்...