×

சிபிஐ கைதுக்கு எதிரான மணீஷ் சிசோடியா மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு: டெல்லி ஐகோர்ட்டை நாட அறிவுரை..!

டெல்லி: சிபிஐ கைதுக்கு எதிரான டெல்லி துணை முதல்வர் சிசோடியா மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி புதிய மதுபான கொள்கையை ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியது. இதன்படி 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. புதிய கொள்கையின்படி மதுக்கடை உரிமையாளர்கள் தாங்களே விலையை நிர்ணயித்து கொள்ளவும், வாடிக்கையாளர்களுக்கு இலவசங்களை வழங்கவும், வீடுகளுக்கு மதுபானங்களை நேரடியாக விநியோகம் செய்யவும் அதிகாலை 3 மணி வரை கடைகளை திறந்திருக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த சூழலில் புதிய மதுபானகொள்கையின்படி மதுக்கடைகளுக்கு உரிமம் வழங்கியது உட்பட பல்வேறு விவகாரங்களில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தலைமைச் செயலாளர் நரேஷ்குமார், டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனாவிடம் அறிக்கை அளித்தார். அதன்பேரில் சிபிஐ விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்தார். கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி டெல்லி உட்பட பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 36 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த ஊழல் தொடர்பாக மணீஷ் சிசோடியாவிடம் பலமுறை விசாரணை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார்.

டெல்லி சிறப்பு நீதிமன்றம் மணீஷ் சிசோடியாவை 5 நாள் சிபிஐ காவலில்  வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவர் மீதான விசாரணை விபரங்களை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி சிசிடிவி  கவரேஜில் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்நிலையில் மணீஷ் சிசோடியா தரப்பில், சிபிஐ விசாரணை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் சிபிஐ கைதுக்கு எதிரான டெல்லி துணை முதல்வர் சிசோடியா மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாட துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.


Tags : Supreme Court ,Manish Sisodia ,CBI ,Delhi High Court , Supreme Court refuses to accept Manish Sisodia's plea against CBI arrest: Advice to approach Delhi High Court..!
× RELATED ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தொடரும்:...