×

எம்எல்ஏ கொலை வழக்கின் சாட்சியை கொன்ற சம்பவம்: தேடப்பட்ட குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக் கொலை

பிரயாக்ராஜ்: எம்எல்ஏ கொலை வழக்கின் சாட்சியை கொன்ற சம்பவத்தில் தேடப்பட்ட குற்றவாளியை உத்தரபிரதேச போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். உத்தரபிரதேச மாநிலம் பகுஜன் சமாஜ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜு  பால் கடந்த 2005ல் படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கின் முக்கிய சாட்சியான  உமேஷ் பாலும், அவரது போலீஸ் பாதுகாவலர் சந்தீப் நிஷாத் ஆகியோர் மர்ம  நபர்களால் கொல்லப்பட்டனர்.

இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த முகமது அர்பாஸ் (24)  என்ற குற்றவாளி குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.50,000 வெகுமதி அளிக்கப்படும்  என்று போலீசார் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேடப்பட்ட குற்றவாளி முகமது அர்பாஸ், பிரயாக்ராஜில் உள்ள நேரு பூங்கா அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், முகமது அர்பாஸை சுற்றி வளைத்து சரணடையச் சொன்னார்கள்.

ஆனால் அவர் காவல்துறையை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதற்கு போலீசார் பதிலடி கொடுத்த போது, முகமது அர்பாஸ் மீது துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை ஆணையர் ரமித் சர்மா கூறினார். உமேஷ் பால், போலீஸ் காவலர் சந்தீப் நிஷாத் ஆகியோர் கொல்லப்பட்ட 72 மணி நேரத்திற்குப் பிறகு, முக்கிய குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : MLA , MLA murder case witness killed: Wanted convict shot dead in encounter
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...