×

ரயில்வே ஆட்சேர்ப்பு மோசடி வழக்கில் லாலு பிரசாத் ரப்ரி தேவிக்கு சம்மன்: சிங்கப்பூரில் இருந்து திரும்பிய நிலையில் நடவடிக்கை

புதுடெல்லி: ரயில்வே ஆட்சேர்ப்பு மோசடி வழக்கில் லாலு பிரசாத் யாதவ், ரப்ரி தேவி உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. இந்திய ரயில்வேயில் முறைகேடாக ஆட்சேர்ப்பு மற்றும் நிலத்திற்குப் பதிலாக ரயில்வேயில் வேலை கொடுப்பதாக கூறி பணமோசடி செய்த வழக்கில், பீகார் முன்னாள் முதல்வர் ரப்ரி தேவி மற்றும் அவரது கணவரான ராஷ்ட்ரிய ஜனதா  தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், அவர்களது மகள் மிசா பாரதி உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக சிபிஐ வழக்குபதிவு செய்திருந்தது. இவ்வழக்கை டெல்லி ரோஸ் அவென்யூ  நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன் சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு லாலு பிரசாத் யாதவ் வீடு திரும்பினார். இந்நிலையில் மேற்கண்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. குற்றப்பத்திரிகையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், லாலு பிரசாத் யாதவ் உட்பட 14 பேரும் வரும் மார்ச் 15ம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளது. அன்றைய தினம் அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. லாலு பிரசாத் ஒன்றிய ரயில்வே அமைச்சராக இருந்த காலகட்டத்தில், மேற்கண்ட வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Lalu Prasad Rabri Devi ,Singapore , Lalu Prasad summons Rabri Devi in railway recruitment scam case: Action on return from Singapore
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...