×

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3வது டெஸ்ட் இந்தூரில் நாளை தொடக்கம்: ஹாட்ரிக் வெற்றிபெறும் முனைப்பில் ரோகித் அன்ட்கோ

இந்தூர்:ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மேலும் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றிருப்பதால் பார்டர்-கவாஸ்கர் கோப்பையையும் இந்திய அணி தக்கவைத்துள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை பதிவு  செய்தால் கூட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும்.இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நாளை (மார்ச்1) இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் தொடங்குகிறது. இதற்காக மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கம் அதிக பவுன்ஸ் கொண்ட சிவப்பு மண் பிட்சை அமைத்துள்ளது. இந்த பிட்ச் துவக்கத்தில் வேகம் மற்றும் பவுன்சர்களுக்கு சாதகமாக இருக்கும்.

முந்தைய இரண்டு டெஸ்ட்களைப் போலல்லாமல் பேட்டர்கள் நன்றாக பேட் செய்யவும் இது உதவும். ஆஸ்திரேலிய வீரர்கள் இயல்பாகவே பவுன்ஸ் பிட்ச்களில் விளையாடுவதில் நிபுணத்துவம் பெற்றவர்கள். இது அவர்களுக்கு இந்தூரில் நன்றாக கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் முழுக்க  முழுக்க ஸ்பின்னர்களின் ஆதிக்கம் மட்டுமே இருந்தது. இரு அணிகளுமே 3  ஸ்பின்னர்களுடன் களமிறங்கினர். ஆனால் இந்தூர் மைதான பிட்சில் மிக அதிகமான பவுன்சர் மற்றும் வேகம் இருக்கும் என்பதால் எட்ஜ் கேட்ச்களை பிடித்துவிடலாம். 3வது நாளின் மதியத்தில் இருந்து தான் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு இந்த பிட்ச் உதவும். இதேபோல் பேட்ஸ்மேன்கள் நன்கு நிதானமாக நின்று ஆடினால் நல்ல ஸ்கோர் அடிக்கலாம். ஆஸ்திரேலிய அணியில் இந்த முறை ஸ்டார் பவுலர்கள் மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர்.

அவர்கள் இருவரையும் இந்திய பேட்ஸ்மேன்கள் சமாளித்தால் மட்டுமே ஸ்கோர் செய்ய முடியும். இது மட்டுமல்லாமல் இந்திய அணியும் ஒரு ஸ்பின்னரை வெளியேற்றிவிட்டு கூடுதல் வேகப்பந்துவீச்சாளருடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய அணியில் தலைசிறந்த ஸ்பின்னர்களான  ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் உள்ளனர். பிட்ச் வேகத்திற்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால், இதில்  ஒருவரை நீக்கிவிட்டு வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை சேர்க்க வேண்டிய  கட்டாயத்தில் ரோஹித் ஷர்மா இருக்கிறார். ஜெய்தேவ் உனத்கட் அல்லது உமேஷ் யாதவை இந்தியா தேர்வு செய்யலாம். அப்படியானால், அக்சர் படேல் வெளியே உட்கார வேண்டியிருக்கும்.

இந்தியாவின் சிறந்த ஆஃப் ஸ்பின்னரான அஸ்வின் இந்த மைதானத்தில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். கடைசியாக இந்தியா இங்கு விளையாடிய டெஸ்டின் போது, ​​விராட் கோஹ்லி கேப்டனாக இருந்தார். அவர் உமேஷ்யாதவ், இஷாந்த் சர்மா மற்றும் முகமது ஷமி ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை களமிறக்கினார். இதுவரை நடந்த போட்டிகளில் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் தலா 2 வேகங்களை மட்டுமே பயன்படுத்தியுள்ளன. பாட் கம்மின்ஸ் மற்றும் ஸ்காட் போலண்ட் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடியுள்ளனர், அதே நேரத்தில் இந்தியா முகமதுஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோருடன் விளையாடியது.

இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 104 டெஸ்ட் போட்டிகளில் மோதி உள்ளன. இதில் 43ல் ஆஸ்திரேலியாவும் 32ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. 28 போட்டிகள் டிராவிலும், ஒரு போட்டி டையிலும் முடிந்துள்ளது. நாளை 105வது போட்டி நடைபெற உள்ளது. இதுவரை இந்த மைதானத்தில் 2 டெஸ்ட் நடந்துள்ளது. இதில் நியூசிலாந்துக்கு எதிராக 2016ல் இந்தியா 321 ரன்னிலும், 2019ல் வங்கதேசத்திற்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 130 ரன் வித்தியாசத்திலும் வென்றுள்ளது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 முன்னிலை வகிப்பதால் நாளை துவங்கும் டெஸ்டிலும் ரோஹித் அன்ட் கோ வென்று ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.


Tags : India ,Australia ,Indore ,Rohit Andko , India-Australia 3rd Test starts in Indore tomorrow: Rohit Andko on target for hat-trick
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!