×

திருவேற்காடு அயனம்பாக்கம் அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு: அமைச்சர் சா.மு.நாசர் பேச்சு

பூந்தமல்லி: அயனம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என பள்ளி ஆண்டு விழாவில் அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். திருவேற்காடு நகராட்சி அயனம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியின் 33வது ஆண்டு விழா மற்றும் ஐம்பெரும் விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். திருவேற்காடு நகரமன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் ஏ.ஜே.பவுல் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்துகொண்டு, பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வளாக சுற்றுச்சுவர் மற்றும் விளையாட்டு மைதானத்தை மாணவர்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.

மேலும் பள்ளி வளாகத்தில் ஆயிரமாவது மரக்கன்றை நட்டு வைத்தார். இதையடுத்து முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் விளையாட்டு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள், தனித்திறமை போட்டிகளில் மாநில, மாவட்ட அளவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார். இதையடுத்து அமைச்சர் நாசர் பேசியதாவது: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பல்வேறு துறைகளில் தலை சிறந்து விளங்குகின்றனர். இந்தப்பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் தலைசிறந்தவர்களாக உருவாக ஆசிரியர்களும், பெற்றோர்களும்தான் காரணம். காலத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி மாணவர்கள் கல்வி மட்டுமின்றி ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்விக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். 6 முதல் 12ம் வகுப்பு வரை மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவது, வீடு தேடி கல்வி, நான் முதல்வன், பள்ளிகளில் காலை சிற்றுண்டி என பல திட்டங்கள் கல்வி மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் கல்வித்துறைக்கு ரூ.36 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து கல்வி வளர்ச்சிக்கு உதவியுள்ளார்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், திருவேற்காடு நகராட்சி ஆணையர் ரமேஷ்,  பொறியாளர் குமார், நகரமன்ற உறுப்பினர்கள் சங்கர், விஜயலட்சுமி, பிரதானம், ருக்மணி பவுல், காஞ்சனா, சுதாகர், விக்னேஸ்வரன், ஜானகி  மற்றும் திமுக நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி தலைமையாசிரியை சாந்தா தேவி, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Tags : Thiruvedu Ayanambakkam Government School ,Minister ,b.k. ,Nassar , Allocation of Rs. 25 lakhs for construction of new building for Tiruvekkadu Ayanampakkam Government School: Minister S. M. Nasser Speech
× RELATED இந்திய பிரதமர் என்ற நிலையில் இருந்து...