சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் குறித்து தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் 2-ம் தேதி நிதியமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் 20-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னையில் பெரு, சிறு, குறு தொழில் நிறுவன சங்க பிரதிநிதிகளுடன் மார்ச் 2-ல் அமைச்சர் ஆலோசனை செய்கிறார். புதிய தோழி நிறுவங்கள், நிதி சலுகைகைகள், வேலைவாய்ப்பு குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 20-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. கூட்டம் தொடங்கியதும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசிப்பார்.நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 3-வது முறையாக தன்னுடைய பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். அதனால், இது பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் 2வது முழு பட்ஜெட்டாகவும் அவர் தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட்டாகவும் உள்ளது.
மார்ச் மாதம் முதல் ஒவ்வொரு துறை வாரியாக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, திட்டங்களை அறிவிப்பது குறித்தும், தற்போதைய துறையின் நிலை பற்றியும் ஆய்வு செய்யவுள்ளனர். கடைசியாக, காவல்துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடக்கும் என கூறப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு, நிதி அமைச்சர் அலுவலத்தில் இருந்து பட்ஜெட் தொடர்பான தேதி முடிவு செய்யப்பட்டு, அது தலைமைச் செயலாளர் மூலமாக முதல்வர் அலுவலகம் செல்லும். நிதித்துறை தெரிவித்துள்ள 2 அல்லது 3 தேதிகளில் ஒன்றை முதல்வர் டிக் அடித்து, அந்த தேதியில் பட்ஜெட் தாக்கல் செய்ய ஒப்புதல் அளிப்பார் என்று தெரிவித்துள்ளார்.
2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிப்பதற்கு தன்னுடைய துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்களுடன் பல்வேறு கட்ட ஆலோசனைக் கூட்டங்களை இரவு பகலாக நடத்தி தற்போதைய பட்ஜெட்டின் இறுதி வடிவத்தை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தயார் செய்துள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு எப்போது உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்போகிறோம் என்பதை அறிவிப்போம் என பேசியிருக்கும் நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பட்ஜெட் தாக்கலில் 20-ஆம் தேதி வந்துவிடும் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.
