×

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திருவள்ளூர் அம்பேத்கர் சட்ட கல்லூரியில் களப்பயண நிகழ்ச்சி: மாணவர்களுக்கு கலெக்டர் ஆலோசனை

திருவள்ளூர்: “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு மாணவர்களிடையே உயர்கல்வி தொடர்வதற்கான உற்சாகத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்ட கல்லூரியில் நடந்த களப்பயணத்தில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பேசியதாவது: அரசு மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் தற்போது 35 சதவீதம் பேர் மட்டுமே உயர் கல்வியை தொடர்கின்றனர். இந்நிலையை மாற்றுவதற்காக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தாண்டு 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி களப்பயணம் செயல்பாடு திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் இருக்கக்கூடிய வேறுபாடுகள், உட்கட்டமைப்பு வசதிகளை கண்டறிந்து தெளிந்திட ஏதுவாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த வாரம் அரசு பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணர்களை பல்வேறு கல்லூரிகளுக்கு, அழைத்து சென்று அங்குள்ள உட்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட அரசால் ஏற்பாடு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் டாக்டர் அம்பேத்கர் சட்ட கல்லூரிக்கு களப்பயணம் வந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இவ்வாண்டு 12ம் வகுப்பு பொதுத் தேர்வினை சிறப்பாக எழுதிட வாழ்த்துகள்’ என்றார்.

மேலும் மாவட்டத்தின் அனைத்து மேல்நிலை பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட அருகாமையில் உள்ள மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளான திருத்தணி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக்கல்லூரி, பொன்னேரி எல்.அன்.ஜி கலைக்கல்லூரி, திருவள்ளுர் அரசு மருத்துவ கல்லூரி, பட்டாபிராம் டி.ஆர்.பி.சி.சி இந்து கல்லூரி, பொன்னேரி உணவு மற்றும் பால்வள கல்லூரி, அலமாதி மீன்வள கல்லூரி, இருங்காட்டுக்கோட்டை காலனி வடிவமைப்பு கல்லூரி ஆகிய இடங்களுக்கு 1050 மாணவ, மாணவியர்கள் களப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.ராமன், கல்லூரி முதல்வர் முனைவர் கயல்விழி, பள்ளி கல்வித்துறை உதவி திட்ட அலுவலர் பாலமுருகன் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Thiruvallur Ambedkar Law College , Field trip program at Tiruvallur Ambedkar Law College under Nan Muthvan scheme: Collector advises students
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...