×

தொண்டனாக, இளைஞரணி தலைவராக, எம்எல்ஏ-வாக, மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக உயர்ந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் : கமல்ஹாசன்!!

சென்னை : எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற தலைப்பில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறும் புகைப்பட கண்காட்சியை மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் திறந்து வைத்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தனது 70வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதனை முன்னிட்டு பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதையை விளக்கும் விதமாக புகைப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற தலைப்பில் நடைபெறும் இந்த கண்காட்சியை மக்கள் நீதி மைய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்தை முன்கூட்டியே தெரிவித்துக் கொண்டார். மேலும் பேசிய அவர், சந்தோஷத்தை அனுபவித்து சவால்களையும் ஏற்று படிப்படியாக உயர்ந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். கட்சித் தொண்டனாக, இளைஞரணித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, மேயராக உயர்ந்தவர் மு.க.ஸ்டாலின்.  

அமைச்சராக, துணை முதல்வராக, இன்று தமிழ்நாட்டின் முதல்வராக என்று படிப்படியாக உயர்ந்தவர் மு.க.ஸ்டாலின். படிப்படியாக மு.க.ஸ்டாலின் உயர்ந்து இருப்பது அவரது பொறுமையை மட்டுமல்ல, திறமையையும் காட்டுகிறது.சவால்களை ஏற்று படிப்படியாக உயர்ந்தவர் மு.க.ஸ்டாலின்.கலைஞர் மகன் ஸ்டாலின் என்று இருந்த காலத்தில் இருந்து தமக்கு மு.க.ஸ்டாலினை தெரியும்.நெருங்கிய நட்பு என்று கூற முடியாவிட்டாலும் மு.க.ஸ்டாலினுடன் தமக்கு நட்பு இருந்தது.

மு.க.ஸ்டாலின் உடனே நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதை இருவருமே நிரூபித்து கொண்டு இருக்கிறோம்.,என்றார். முதல்வரின் பள்ளி பருவம், அரசியல் வாழ்க்கை ஆரம்பம், மிசா கால போராட்டம், அவர் மேயராக, அமைச்சராக, கட்சி தலைவராக, பொறுப்பேற்ற முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்களும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. இந்த கண்காட்சியை இன்று முதல் வருகிற மார்ச் 12ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : MLA ,chief minister ,M.K.Stalin ,Kamal Haasan , Chief Minister, M.K.Stalin, Kamal Haasan
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்