×

கடவூர், தோகைமலை பகுதிகளில் அதிகளவில் பீர்க்கங்காய் சாகுபடி

*குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற ஆலோசனை

தோகைமலை : கரூர் மாவட்டம் கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் குறைந்த முதலீட்டில் பீர்க்கங்காய் பயிரிட்டு ஒரு ஹெக்டேருக்கு 15 முதல் 20 டன் வரை மகசூல் பெற்று அதிகமான லாபம் பெறலாம் என்று முன்னோடி விவசாயிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.காய் வகைகளில் அனைத்து தரப்பினர்களும் விரும்பி உண்ணுவது பீர்க்கங்காயும் ஒன்றாகும். கொடி வகையை சார்ந்தது. மண் தப்பவெப்ப நிலை பொதுவாக மண் பாங்கான தண்ணீர் தேங்காத அனைத்து மண் வகைகளும் ஏற்றதாகும். இந்த பயிரை கோடை, மழை காலங்களிலும் சாகுபடி செய்யலாம். கோடைகாலங்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பருவம்: பீர்க்கங்காய் பயிர் சாகுபடிக்கு ஜூன், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்கள் பருவ காலமாக உள்ளது.நிலம் தயார் படுத்துதல்: நிலத்தை 3 முதல் 4 முறை நன்றாக உழுது 2.5 மீட்டர் இடைவெளியில் 60 செமீ அகலம் உள்ள வாய்க்கால்களை எடுத்து நிலத்தை தயார்படுத்த வேண்டும். பின்பு வாய்க்காளில் 45 செமீ ஆழம், அகலம், நீளம் உள்ள குழிகளை 1.5 செமீ இடைவெளியில் எடுக்க வேண்டும். அதில் 10 கிலோ நன்றாக மக்கிய தொழு உரத்துடன் 100 கிராம் கலப்பு உப்பு கலந்து மேல் மண்ணுடன் சேர்க்க வேண்டும். தொடர்ந்து நடவுக்குழு தயார் செய்ய வேண்டும்.

விதை அளவு: ஒரு ஹெக்டேருக்கு 1.50 கிலோ முதல் 2 கிலோ வரை விதை தேவைப்படும். ஒரு குழிக்கு 5 விதைகள் ஊன்ற வேண்டும். விதை முளைத்தவுடன் நன்கு வளர்ந்த 3 செடிகளை தவிர மற்ற செடிகளை பிடுங்கி எடுத்துவிட வேண்டும்.பின்செய் நேர்த்தி: விதை ஊன்றியவுடன் குடம் அல்லது பூவாளி வைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும். நாற்றுகள் வளர்ந்த உடன் வாய்க்கால் மூலம் முதல் 10 நாட்கள் இடைவெளியில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். கொடி வளர்ந்தவுடன் பந்தல் போட்டு கொடியைப் படரவிட வேண்டும்.

எத்ரல் எனும் வளர்ச்சி ஊக்கியை 250 பிபஎம் என்ற அளவில் இரண்டு இலைப் பருவத்தில் தெளிப்பதால் பெண் பூக்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதை மீண்டும் நாட்கள் இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும். விதை ஊன்றிய 30 நாள் கழித்து களை எடுக்க வேண்டும். அதன்பின்னர் 50 கிலோ யூரியாவை மேல் உரமாக இட்ட பிறகு மண் அனைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

பயிர் பாதுகாப்பு:  பூசணி வண்டு தாக்குதலை தடுப்பதற்கு 2 கிராம் கார்பரைல் மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். இல்லை என்றால் கருவாட்டுப்பொறி வைத்தும் கட்டுப்படுத்தலாம். சாம்பல் நோயை கட்டுப்படுத்துவதற்கு 0.1 சதவீதம் பெவிஸ்டின் மரந்தை தெளித்து கட்டுப்படுத்தலாம் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

அறுவடை மகசூல்: விதை ஊன்றிய பிறகு 50 முதல் 60 நாட்கள் கழித்து முதல் அறுவடை செய்து மகசூல் பெறலாம். அதை தொடர்ந்து ஒரு வாரம் இடைவெளியில் 10 முறை தொடர்ந்து அறுவடை செய்யலாம். விவசாயிகள் இந்த முறையை கடைபிடித்தால் ஒரு ஹெக்டேருக்கு 15 முதல் 20 டன் வரை மகசூல் பெற்று பயன் அடையலாம் என்று முன்னோடி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Tags : Kadavur ,Thokimalai , Thokaimalai: In Kadavur and Thokaimalai union areas of Karur district, Birkangai is cultivated with low investment at 15 to 15 per hectare.
× RELATED கடவூர், தோகைமலை பகுதியில் கம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்