×

கழிவுநீர் ஓடும் ஆறாக மாறிய பாலாறு

வேலூர் : கடந்த ஓராண்டுக்கும் மேல் தண்ணீர் ஓடிய வேலூர் பாலாறு தற்போது கழிவுநீர் ஓடும் ஆறாக மீண்டும் மாறியுள்ளதாக வேதனை குரல்கள் எழுந்துள்ளன. வடதமிழகத்தின் ஜீவாதாரமான பாலாறு,  கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகி அங்கு 93 கி.மீ பயணித்து, ஆந்திர  மாநிலத்தில் 33 கி.மீ, தமிழகத்தில் 222 கி.மீ பயணித்து செங்கல்பட்டு மாவட்டம்  வயலூரில் வங்கக்கடலில் சங்கமிக்கிறது. வேலூர் மாவட்டம் அருகாமையில் உள்ள நிலத்தடி நீரை ரீசார்ஜ் செய்யும் முக்கிய நீராதாரமாக பாலாறு விளங்குகிறது.

வேலூர் மாவட்டம் தற்போது மருத்துவம், ஆன்மீகம் மற்றும் கல்வி என மூன்று முனைகளில் சிறந்து விளங்கும் நிலையில் அத்தேவைகளுக்காக, வேலூர் நகருக்குள் அதிகளவில் மக்கள் குடிபெயர்ந்து வரும் நிலையில், மாநகராட்சி மக்களுக்கு தரமான குடிநீரை வழங்குவது அவசியமாகிறது. கடந்த 20 ஆண்டுகளில் வறண்ட நதியாக ஆண்டுக்கு ஒரு முறை விரல் விட்டு எண்ணக்கூடிய நாட்களில் மட்டுமே பாலாற்றில் வெள்ளத்தை காண முடியும் என்ற நிலைமாறி கடந்த ஓராண்டுக்கும் மேல் பாலாறு வற்றாத ஜீவநதியாக மாறி மக்கள் மனதை குளிர்வித்து வந்த நிலையில் தற்போது நீர்வரத்து குறைந்து வருகிறது.

இந்த நிலையில் மீண்டும் பாலாற்றில் தோல் கழிவும், ரசாயன கழிவும் வந்து சேர்ந்து வருகிறது. இது ஒருபுறம் என்றால் வேலூர் மாநகராட்சி பகுதிகளில் இருந்து கருப்பு கலரில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. அதோடு சேகரிக்கப்படும் குப்பைகள் கொண்டு வந்து பாலாற்றில் கொட்டி எரித்து வருகின்றனர். இதனால் பாலாற்றின் தோற்றம் மீண்டும் கோரமாகி வருகிறது. எனவே இதன் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்டு கொள்ளாத மாசு கட்டுபாட்டு வாரியம்

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பயணிக்கும் பாலாற்று பகுதிகளில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் வெளியேறும் ரசாயன கழிவுகளால் மாசடைந்து வருகிகிறது. இதுமட்டுமின்றி மாநகராட்சி, நகராட்சிகளில் சேகரிக்கும் குப்பைகளை கொட்டி எரிப்பது, பள்ளம் தோண்டி புதைப்பது என்று செய்து வருகின்றனர். இதனால் நிலத்தடி நீரும் மாசடைந்து வருகிறது. இதனால் பாலாற்றின் சுற்று பகுதிகளில் நிலத்தடி நீர் உப்பாக மாறி உள்ளது.


Tags : Vellore: Voices of agony that the Vellore Palaru, which had been running for more than a year, has now turned into a sewage-flowing river again.
× RELATED சுற்றுலா பயணிகளின் வசதிக்காக;...