×

கம்பம், குமுளியில் விளையும் ஏற்றுமதி ரக ஏலக்காய் கிலோ ரூ.2500 ஆனது-உற்பத்தி குறைவால் விவசாயிகள் கவலை

போடி : கம்பம் மற்றும் குமுளி பகுதியில் விளையும் ஏற்றுமதி ரக ஏலக்காய்க்கான கொள்முதல் விலை ஒரு கிலோ ரூ.2500 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் தற்போது போதிய அளவில் ஏலக்காய் உற்பத்தி இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.தேனி மாவட்டத்திலிருந்து போடிமெட்டு, கம்பம் மெட்டு, குமுளி போன்ற மலைப்பாதைகளின் வழியாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு செல்லலாம். இந்த இருமாநில எல்லை பகுதிகளில் சுமார் 2.50 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் ஏலக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது. இதன்படி ஒரு ஏக்கரில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏலச்செடிகளை நடவு செய்யலாம். இவை வளர்ந்து குறிப்பிட்ட பருவத்தில் காய்க்கத்தொடங்கும். இதன்படி ஒரு செடியில் இருந்து தொடர்ந்து 15 ஆண்டுகள் வரை விவசாயிகள் ஏலக்காய்களை பறித்துக்கொள்ள முடியும்.

இதற்கிடையே ஏலக்காய் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நிர்ணய விலை கிடைக்க வேண்டும் என்று அவர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒன்றிய அரசு இதில் கவனம் செலுத்த மறுக்கிறது. நம் நாட்டில் உற்பத்தியாகும் ஏலக்காய், கிராம்பு உள்ளிட்ட நறுமண பொருட்களை உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து நாட்டின் பொருளாதாரத்தை பெருக்கும் பணிகளை இந்திய நறுமண வாரியம் மேற்கொள்கிறது. இதன் சார்பில் விவசாயிகளின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ஏலக்காய் கொள்முதல் செய்து சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச அளவில் அனுப்பி வைக்கப்படும் இந்திய ஏலக்காயின் கொள்முதல் விலை, தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் போடி மற்றும் கேரளாவில் இடுக்கி மாவட்டம் புத்தடி ஆகிய இடங்களில் உள்ள ஸ்பைஸஸ் போர்டு வாயிலாக இணைய தளத்தில் ஏலம் நடத்தி முடிவு செய்யப்படுகிறது. இந்திய ஏலக்காய்க்கு மருத்துவ குணத்துடன் நறுமணமும் உள்ளதால் இதனை பல்வேறு நாடுகள் கொள்முதல் செய்கின்றன. தற்போது இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் உற்பத்தி 30 சதவீதமாக உள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஏலக்காய் சீசன் தொடங்கும். அதிலிருந்து எட்டு மாதங்கள் வரை அதன் விளைச்சல் அதிகமாக இருக்கும். இதனால் தற்போது 15 ஆண்டுகள் விளைச்சல் கொடுத்த ஏலச்செடிகளை பறித்து அகற்றி வரும் விவசாயிகள் அங்கு புதிய செடிகளை நடவு செய்யும் பணிகளை மேற்கொள்கின்றனர். இதற்கிடையே ஏலக்காய் ஒரு கிலோ ரூ.1400க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.தற்போது பிரிக்கப்படாத ஏலக்காய் கிலோ ரூ.1800 ஆகவும், ஏற்றுமதி தரம் வாய்ந்த ஏலக்காய் ரூ.2500 என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் தற்போது ஏலக்காய் வரத்து இல்லாததால் இந்த விலை உயர்வு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

Tags : Pole ,Kumburi , Bodi: The purchase price of export cardamom grown in Kampam and Kumuli area has increased to Rs.2500 per kg.
× RELATED நிலவுக்கு சென்ற அமெரிக்காவின் லேண்டர் செயல்பாட்டை நிறுத்தியது