போடி அருகே கொட்டகுடி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் தேவை

*புழுதிச்சாலையை சீரமைக்க வேண்டும் *விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

போடி : போடி அருகே கொட்டகுடி ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதுடன், 2 கி.மீ தூரமுள்ள புழுதிச்சாலையை தார்ச்சாலையாக மாற்றம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.போடி அருகே துரைராஜபுரம் காலனி - தோப்புப்பட்டிக்கு இடையே 2 கி.மீ தூரமுள்ள வேம்புலி வாய்க்கால் சாலை அமைந்துள்ளது. இந்தச் சாலையின் இரு புறங்களிலும் சுமார் 2000 ஏக்கர் அளவிலான தென்னை, இலவம், வாழை, சோளம், தட்டாம் பயறு, பாசிப்பயறு மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. இதற்கு இப்பகுதியில் உள்ள கொட்டகுடி ஆற்றின் நீர் மற்றும் நிலத்தடி நீர் உதவியாக உள்ளது.

போடியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருக்கும் விவசாயிகள் தொடர் விவசாய பணிகள் மேற்கொள்வதால் உரம், பூச்சி மருந்துகள் கொண்டு செல்லவும், விளைபொருட்களை எடுத்துவரவும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் போக்குவரத்துக்கான வாகன வசதிகள் ஏதும் இல்லாத நிலையில், டூவீலர்கள் மற்றும் வாடகை வாகனங்களில் சென்று கடும் போராட்டங்களுக்கு நடுவே விவசாய பணிகளை தொடர்கின்றனர்.

இந்த வேம்புலி வாய்க்கால் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கடந்து சென்றால், போடி குரங்கணியிலிருந்து வைகை அணையில் சேரும் கொட்டக்குடியாறும் குறுக்கே வருகிறது. இந்த பகுதிகள் முழுமையாக போடி ஒன்றியத்தில் உள்ள அணைக்கரைப்பட்டி கிராம ஊராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்தச்சாலையில் சுப்பையா சித்தர் என்பவரின் ஜீவசமாதி மற்றும் கோயில், பாதாளராயன் கோயில் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இங்கு பவுர்ணமி, அமாவாசை தினங்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் பல்வேறு பகுதியிலிருந்து வரும் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

இச்சாலை போடி - தேனி இடையிலான ரயில் பாதையின் குறுக்கே செல்கிறது. இதனால் அந்த இடத்தில் மட்டும் சுரங்க மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இச்சாலையின் குறுக்கே கொட்டகுடி ஆறு கடப்பதால் டூவீலர்கள், கார், டெம்போ உள்ளிட்ட வாகனங்கள் ஆற்றுக்குள் இறங்கி தண்ணீரில் தத்தளித்தபடி செல்கின்றன. பின்னர் அடுத்துள்ள 2 கி.மீ தூரத்திற்கு சாலை வசதி ஏதும் இல்லாததால் புழுதிக்காடான மண் சாலையில் பயணிக்கின்றனர். மழைக்காலங்களில் இந்த சாலை சேறும், சகதியுமாக மாறுவதால் அதில் வாகனங்களை இயக்க முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

விவசாயிகள் இயற்கை உரம், மருந்து சாணம், கூலியாட்களை அழைத்துச் செல்வது, விளை பொருட்களை கொண்டு வருவது உள்ளிட்ட பணிகளை பெரும் அவதியுடன் மேற்கொள்கின்றனர். குறிப்பாக மழை நேரங்களில் இந்த சாலையில் உருவாகும் சகதியில் சிக்கிக்கொள்ளும் வாகனங்களை வேறு வாகனங்கள் உதவியும் மீட்கும் நிலை தொடர்கிறது. இப்பகுதி விவசாயிகள் மரக்காமலை அடிவாரம் வரையிலான நிலப்பகுதியில் தொடர்ந்து விவசாய பணிகளை மேற்கொள்ள இந்த 2 கி.மீ சாலையை தார்ச்சாலையாக அமைத்துத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக அணைக்கரைப்பட்டி கிராம ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ச்சியாக மனுக்கள் அளித்தும் இதுவரை அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறுகின்றனர்.

மேலும் பருவமழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் வேம்புலி வாய்க்கால் சாலையின் குறுக்கே செல்லும் கொட்டகுடியாற்றினை கடந்து செல்ல முடியாமல் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நீர்நிலைப் பகுதிகளில் உள்ள ஆக்கிரப்புகளை அகற்றியும், ஆற்றுப்பகுதியில் விவசாயிகள், கிராம மக்கள் பயன்படும் வகையில் தடையில்லா போக்குவரத்தை உறுதி செய்யும் விதமாக பாலம், சாலைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த வேம்புலி வாய்க்கால் சாலையை சீரமைப்பதுடன், கொட்டகுடியாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயி ஜம்பு சுதாகர் கூறுகையில், அணைக்கரைப்பட்டி ஊராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள வேம்புலி வாய்க்கால் சாலையோரம் அதிக அளவில் விவசாயம் நடக்கிறது. சாலையின் குறுக்கே கொட்டகுடியாறு செல்கிறது. இந்த இடத்தில் பாலம் இல்லை. சாலையும் பலத்த சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த சாலை விவசாயிகள் மற்றும் கோயில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு தேவையானதாக உள்ளது. எனவே சாலையின் குறுக்கே ஆற்றுப்பகுதியில் பாலம் அமைப்பதுடன், தார்ச்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: