×

நீலகிரி மாவட்ட எஸ்ஒய்எஸ் அமைப்பு சார்பில் 400 ஜோடிகளுக்கு சமுதாய திருமணம்-அவரவர் மத முறைப்படி நடந்தது

கூடலூர் : நீலகிரி மாவட்ட எஸ்ஒய்எஸ் அமைப்பு சார்பில் 400 மணமக்களுக்கு இலவச சமுதாய திருமணம்  5 பவுன் நகை சீர்வரிசையுடன்  நடந்தது.கூடலூரை அடுத்த பாடந்துறை பகுதியில் இயங்கி வரும் மர்க்கஸ் பள்ளி வளாகத்தில் நீலகிரி  மாவட்ட எஸ்ஒய்எஸ் அமைப்பு சார்பில்  மணமக்களுக்கு இலவச சமுதாய திருமணங்கள்  நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று நடைபெற்ற ஐந்தாவது சமுதாய திருமண நிகழ்ச்சியில் 400  குடும்பங்களைச் சேர்ந்த மணமக்களுக்கு இலவச சமுதாய திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. 3 கிறிஸ்தவ ஜோடிகள், 37 இந்து ஜோடிகள் மற்றும் 360 இஸ்லாமிய உள்ளிட்ட 400 ஜோடிகளுக்கு அவரவர் மத முறைப்படி திருமணங்கள் நடைபெற்றது. இஸ்லாமிய ஜோடிகளுக்கு பாடந்துறை மர்க்கஸ் பள்ளி வளாகத்திலும், இந்து ஜோடிகளுக்கு பாடந்துறை ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்திலும், கிறிஸ்தவ ஜோடிகளுக்கு கிறிஸ்தவ ஆலயத்திலும் அந்தந்த மத முறைப்படி திருமணங்கள் நடைபெற்றன. பின்னர் அவர்களுக்கான விருந்து உபச்சாரம் பாடந்துறை மர்க்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.

இலவச சமுதாயத் திருமணம் முடித்த மணமக்களுக்கு தலா 5 பவுன் தங்க நகை, ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் உடைகள், தானிய பொருட்கள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு சமஸ்தான தலைவர் சுலைமான் முசிலியார் தலைமை வகித்தார். அப்துல்காதர் முசிலியார் திருமண நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

அப்துல் ஹக்கீம் சகாபி, அப்துல் சலாம், அலி அக்பர் சகாபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடலூர் ஆர்டிஓ முகமது குதிரத்துல்லா, தாசில்தார் சித்தராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருமண ஜோடிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் என சுமார் 20,000 பேர் கலந்து கொண்டதாகவும் அனைவருக்கும் திருமண விருந்து உணவு வழங்கப்பட்டதாகவும் அதன் ஏற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர். நிர்வாகி மஸ்ஜித் நன்றி கூறினார்.

Tags : Nilgiris District SYS Organization , Kudalur: Nilgiri district SYS organization organized free community marriage for 400 brides with 5 pounds of jewelry.
× RELATED கார், வேன் மோதி தீப்பிடித்து எரிந்தது