×

ஆற்காடு அருகே திமிரியில் கைவரிசை கத்தியை காட்டி வழிப்பறி, வீடு புகுந்து திருடியவர் கைது

* ₹50 ஆயிரம் பறிமுதல்  * நகைகளுடன் வேலூர் வாலிபர் தலைமறைவு

ஆற்காடு :  ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த திமிரி பாவேந்தர் நகரை சேர்ந்தவர் மனோகரன், விவசாயி. இவர் நேற்று முன்தினம் திமிரி பஜார் வீதியில் உள்ள கடையில் டீ குடிக்க நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஒருவர் மனோகரனிடம் பேச்சு கொடுத்துள்ளார். பின்னர், திடீரென கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ₹3 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பியோட முயன்றார். இதை பார்த்த அங்கிருந்த மக்கள் பிடிக்க முயன்றபோது, கத்தியை காட்டி அனைவரையும் மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார். இதுகுறித்து மனோகரன் திமிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில், இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் நேற்று தாமரைப்பாக்கம் செக் போஸ்ட் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த ரமேஷ் (எ) மாட்டு ரமேஷ்(51) என்பதும், மனோகரனிடம் பணம் பறித்தவர் என்பதும் தெரியவந்தது.

மேலும், விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ரமேசும் வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த சசிகுமார் என்பவரும் நண்பர்கள். இருவரும் பூட்டியுள்ள வீடுகளை நோட்டமிட்டு நகை மற்றும் பணத்தை திருடுபவர்கள் என்பது தெரியவந்தது.அதன்படி, கடந்த 9ம் தேதி திமிரி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக உள்ள அகிலா என்பவரது வீட்டில் ஆறரை சவரன்  நகைகள் மற்றும் ₹50 ஆயிரம் ரொக்கம் திருடியதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து ₹53 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை வாலாஜா கோட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், ஆறரை சவரன்  நகைகளுடன் தலைமறைவான அவரது நண்பர் சசிகுமாரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags : Dimiri ,Arcot , Arcot: Manokaran is a farmer from Thimiri Bavendar town, Ranipet district, Arcot. He was in Timiri Bazaar the day before yesterday
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...