×

ஏற்காடு கோடை விழா முன்னேற்பாடுகள் தீவிரம்-மலர் விதைகள் நடவு செய்து பராமரிப்பு

ஏற்காடு : ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சிக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்தது வருகிறது. தோட்டக்கலைத்துறை சார்பில் பூங்காவில், மலர் விதைகள் தொட்டிகளில் விதைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காட்டில், ஆண்டுதோறும் மே மாதத்தில், கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டு கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடத்துவதற்கான ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சுற்றுலா பயணிகளை கவர, மலர் கண்காட்சிக்கான பணிகளில் தோட்டக்கலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஏற்காடு கோடை விழாவில் மலர் கண்காட்சிக்கு தேவைப்படும் மலர் செடிகளை நடவு செய்ய தொடங்கியுள்ளோம். அண்ணா பூங்காவில் பால்சம், ஜீனியா, சால்வியா, டெல்பினியம், ஆஸ்டர், மேரிகோல்டு, சூரியகாந்தி ஆகிய மலர் விதைகள் 25ஆயிரம் முதல்கட்டமாக விதைக்கப்பட்டுள்ளன. ஏற்காடு ரோஜா என்று அழைக்கப்படும் டேலியா கட்டிங்ஸ் 3ஆயிரம் எண்ணிக்கைக்கு மேல் மேட்டுப்பாத்திகளில் நடவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், ரோஜா பூங்கா, அண்ணா பூங்கா, முதலாவது அரசு தாவரவியல் பூங்கா ஆகியவற்றில், 675 வகையான ரோஜா செடிகள் என மொத்தம் 6,750 எண்ணிக்கையில் நடவு செய்யப்பட்டு வருகிறது. ஏற்காட்டில் பருவமழை சீராக பெய்துள்ளதால், தற்போது ஏற்காட்டில் தட்பவெப்ப நிலை சீராக உள்ளது. இதன் காரணமாக, தோட்டங்களில் வைத்துள்ள பூச்செடிகள் செழித்து வளர தொடங்கியுள்ளன. கோடை விழா தொடங்கும்போது, நடவு செய்யப்பட்டுள்ள பூச்செடிகள் முழுமையாக வளர்ச்சியடைந்து, பூத்துக் குலுங்கி, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Yercaud ,Festival , Yercaud: Preparation work for the Yercaud Summer Festival Flower Exhibition is going on in full swing. Flower in the park by Horticulture Department
× RELATED நர்சரி கார்டனில் தீ விபத்து