×

உணவு, குடிநீர், மருத்துவ உதவி வசதிகள்: கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவிற்கு ஒன்றிய அரசு சார்பில் ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு

டெல்லி: கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவிற்கு ஒன்றிய அரசு சார்பில் ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உணவு, குடிநீர், மருத்துவ உதவி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியாவிற்கான துணை தூதரக அதிகாரி ராக்கேஷ் நடராஜன் தகவல் தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த ஓராண்டு காலமாக கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்தன. இதனால், அரசுக்கு எதிராக மக்கள் கிளர்த்தெழுந்து நடத்திய போராட்டத்தால் பிரதமர் மகிந்த ராஜபக்ச, அதிபர் கோத்தபய ராஜபக்ச அடுத்தடுத்து பதவி விலகினர்.

புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கவும், பிரதமராக தினேஷ் குணவர்தனவும் பதவி வகித்து வருகின்றனர். அங்கு வசிக்கும் தமிழர்கள் 224 பேர் கடந்த 2022 ஆண்டு மார்ச் முதல் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர். இந்நிலையில், கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் திருவிழா வரும் மார்ச் 3-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து சிலுவைப்பாதை நிகழ்ச்சியும், மார்ச் 4-ம் தேதி இரவு தேர்ப் பவனியும் நடைபெறுகிறது. கூட்டுத் திருப்பலிக்குப் பின் கொடியிறக்கத்துடன் கச்சத்தீவு திருவிழா நிறைவடைகிறது.

இந்த ஆண்டு திருவிழாவில் இந்திய பக்தர்கள் சுமார் 2,400 பேர் கலந்து கொள்வதற்காக ராமேஸ்வரத்தில் இருந்து 60 விசைப்படகுகளும், 12 நாட்டுப் படகுகளும் பயன்படுத்தப்பட உள்ளன. இந்நிலையில் கடும் நிதி நெருக்கடியால் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளில் பக்தர்களுக்கு இலங்கை கடற்படை சார்பில் இரவு உணவு வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் தகுந்த முன்னேற்பாட்டுடன் செல்ல வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

இதனை தொடர்ந்து கச்சத்தீவு ஆலய திருவிழா குறித்து யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட ஆலோசனை கூட்டத்தில், ‘இந்திய அரசு தரப்பில் அதிகளவில் பொருளாதார ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என்று இலங்கை அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவிற்கு ஒன்றிய அரசு சார்பில் ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உணவு, குடிநீர், மருத்துவ உதவி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியாவிற்கான துணை தூதரக அதிகாரி ராக்கேஷ் நடராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : Union Government ,St. Anthony festival ,Kachchathivu , Food, drinking water, medical assistance facilities: Rs. 4 crore allocation by the Union Government for St. Anthony festival in Kachchathivu
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...