சிபிஐ தன்னை கைது செய்ததை எதிர்த்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தில் முறையீடு.! விரைவில் விசாரணை

டெல்லி: சிபிஐ தன்னை கைது செய்ததை எதிர்த்து டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். டெல்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை கைது செய்திருந்தது. டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி புதிய மதுபான கொள்கையை ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியது.

இதன்படி 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. புதிய கொள்கையின்படி மதுக்கடை உரிமையாளர்கள் தாங்களே விலையை நிர்ணயித்து கொள்ளவும், வாடிக்கையாளர்களுக்கு இலவசங்களை வழங்கவும், வீடுகளுக்கு மதுபானங்களை நேரடியாக விநியோகம் செய்யவும் அதிகாலை 3 மணி வரை கடைகளை திறந்திருக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இந்த சூழலில் புதிய மதுபானகொள்கையின்படி மதுக்கடைகளுக்கு உரிமம் வழங்கியது உட்பட பல்வேறு விவகாரங்களில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தலைமைச் செயலாளர் நரேஷ்குமார், டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனாவிடம் அறிக்கை அளித்தார்.

அதன்பேரில் சிபிஐ விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்தார். கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி டெல்லி உட்பட பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 36 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த ஊழல் தொடர்பாக மணீஷ் சிசோடியாவிடம் பலமுறை விசாரணை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார். டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பங்கஜ் குப்தா கூறும்போது, “புதிய மதுபான கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரினார். மணீஷ் சிசோடியா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தயான் கிருஷ்ணன், மோகித் மாத்தூர், சித்தார்த் அகர்வால் ஆகியோர் கூறும்போது, “துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு பிறகே புதியமதுபான கொள்கை அமலுக்கு வந்தது. சிசோடியா நிதியமைச்சராக உள்ளார். அவர் டெல்லி பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டியபொறுப்பு இருக்கிறது. இந்த வழக்கு சிசோடியாவுக்கு எதிரான சதித் திட்டம்’’ என்று வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாக்பால், சிபிஐ கோரியபடி மணீஷ் சிசோடியாவை 5 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார். இதன்படி மார்ச் 4-ம் தேதி வரை சிசோடி யாவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. சிசோடியா கைதை கண்டித்து தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் ஆம் ஆத்மி கட்சியினர் நேற்று போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் தன்னை கைது செய்ததை எதிர்த்து டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.

Related Stories: