×

100 நாள் வேலையை ஜிபிஎஸ்சில் கண்காணிப்பது சாத்தியமற்றது: அரசு தகவல்

மதுரை: தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே தாருகாபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தொடர்ந்த வழக்கில், ‘நூறு நாள் வேலைத் திட்ட பணியை ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்காணிக்க முடியுமா’ என்பது குறித்து அரசு விளக்கமளிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, ‘தமிழ்நாட்டில் மட்டும் 12.63 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இத்திட்ட பணிக்காக என்எம்எம்எஸ் என்ற தனி செயலி பயன்பாட்டில் உள்ளது. வருகைப் பதிவேடு, வேலைக்கு முன் மற்றும் பிந்தைய நிலை குறித்த புகைப்படங்களை இந்த செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இவை முறையாக ஆய்வு செய்த பின் நடந்த பணி கணக்கிடப்பட்டு வங்கி கணக்கில் சம்பளம் செலுத்தப்படுகிறது. மேற்கொள்ளப்படும் பணியை விட, ஜிபிஎஸ்சிற்காக அதிகளவில் பணம் செலவிட வேண்டிவரும். எனவே ஜிபிஎஸ் மூலம் கண்காணிப்பது சாத்தியமற்றது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், நூறு நாள் வேலைத்திட்ட பணிகள் முறைகேடின்றி நடக்க வேண்டும். தவறு நடக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தொடர்பாக அரசுத் தரப்பில், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இதன்விபரத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Tags : 100 days of work impossible to track on GPS: Govt
× RELATED பொறியியல் மாணவர் சேர்க்கை...