×

ஒரு கண்ணில் வெண்ணெய்... மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு... மதுரை எய்ம்ஸ்சுக்கு 8 ஆண்டில் ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு: ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்; மற்ற மாநிலங்களுக்கு வாரி வழங்கிய ஒன்றிய அரசு

மதுரை: இந்தியாவில் பல்வேறு எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிவடையும் நிலையில், மதுரைக்கு வெறும் ரூ.12.35 கோடி  மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தமிழக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2018ம் ஆண்டு மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ஜனவரி மாதம் பிரதமர் மோடி மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டிய இரண்டரை ஆண்டுகள் கழித்து ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் கடந்த 2021ம் ஆண்டு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட ஒப்பந்தம் முடிந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது வரை மதுரையில் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. குறிப்பாக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கால வகுப்புகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரவிக்குமார், இந்தியாவில் உள்ள அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் திட்ட பணிகள் குறித்து, பல்வேறு கேள்விகளை ஆர்டிஐ மூலம் எழுப்பி இருந்தார். இதற்கு ஒன்றிய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சக சார்பு செயலாளர் அஜய்குமார் பதில் அனுப்பியுள்ளார். அதில், கடந்த 2014ல் புதிதாக அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடர்பான திட்ட மதிப்பீடு, நிதி ஒதுக்கீடு, பணி முடியும் காலம் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, உத்தரப்பிரதேசம் ரேபரேலி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.823 கோடி திட்ட மதிப்பீடு தயாரித்து ரூ.665 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆந்திராவின் மங்களகிரி எய்ம்ஸ்க்கு ரூ.1,618 கோடி திட்ட மதிப்பீடும், ரூ.1,289.62 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. மகாராஷ்டிரா நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.1,577 கோடி திட்ட மதிப்பீடு, ரூ.1,218.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மேற்கு வங்கம் கல்யாணியில் உள்ள எய்ம்ஸ்க்கு ரூ.1,754 கோடி திட்ட மதிப்பீடு, ஒதுக்கீடு ரூ.1362.10 கோடியும், உத்தரப்பிரதேசம் கோரக்பூருக்கு ரூ.1,011 கோடி திட்ட மதிப்பீடும், ரூ.874.38 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டிருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் பதின்டா எய்ம்ஸ்க்கு ரூ.925 கோடி திட்டமதிப்பீடு தயாரித்து, ரூ.788.62 கோடி ஒதுக்கீடும், இமாச்சல பிரதேசம் பிலாஸ்பூர் எய்ம்ஸ்க்கு ரூ.1,471.04 திட்ட மதிப்பீடு, ரூ.1,407.93 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டிருக்கிறது.  ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கான கட்டுமானப்பணிகள் முடிந்துள்ளன. பிலாஸ்பூர் எய்ம்ஸ் பயன்பாட்டுக்கும் திறக்கப்பட்டு விட்டது. அஸ்ஸாம் கவுஹாத்தி எய்ம்ஸ்க்கு திட்டமதிப்பீடு ரூ.1,123 கோடியும், ஒதுக்கீடு ரூ.717.52 கோடியும் செய்யப்பட்டு கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் இருப்பதால், வரும் மே மாதத்திற்குள் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிகிறது.

இதேபோல், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் விஜய்பூரில் ரூ.1,661 கோடி திட்ட மதிப்பீட்டில், ரூ.1,100.78 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு செப்டம்பருக்குள் பணிகள் முழுமையாக முடிகிறது. காஷ்மீர் மாநிலம் அவந்திபோராவில் ரூ.1,828 கோடி திட்ட மதிப்பீட்டில், ரூ.713.67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இங்கு கட்டுமானப்பணி செப்டம்பர் 2025ல் முடிகிறது. ஜார்கண்ட் டியோகார் எய்ம்ஸ்சில் ரூ.1,103 கோடி திட்ட மதிப்பீட்டில், ரூ.793.86 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மார்ச் 2023ல் இங்கும் கட்டுமானப்பணி முடிகிறது.

குஜராத் ராஜ்கோட்டில் ரூ.1,195 கோடி திட்ட மதிப்பீட்டில் ரூ.622.80 கோடி ஒதுக்கீடு செய்து, அக்டோபர் 2023ல் கட்டுமானப்பணிகள் முடிகிறது. தெலங்கானா பீபீ நகர் எய்ம்ஸ் ரூ.1,365.95 கோடி திட்ட மதிப்பீட்டில், ரூ.156.01 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அக்டோபர் 2024ல் கட்டுமானப்பணிகள் முடியும். இவ்வரிசையில் கடந்த 2015ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தமிழ்நாட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.1,977.8 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதுவரையில் ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. பணிகள் அக்டோபர் 2026ல் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் தர்பாங்கா எய்ம்ஸ்க்கு ரூ.1,264 கோடியும், ஹரியானா மானேத்திக்கு ரூ.1,299 கோடியும் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு, நில ஒப்படைப்பு பணிகள் மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட இருக்கிறது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் கட்டுமான பணிகள் முடிந்து மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும் என்று தற்போது முடிந்த ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். ஆனால், உண்மை நிலையோ வேறாக இருக்கிறது. நாட்டில் அத்தனை எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கும் நிதியை வாரி வழங்கி உள்ள ஒன்றிய அரசு, மதுரை எய்ம்ஸ்க்கான ஒதுக்கீட்டில் ஒரு கண்ணில் வெண்ணெய், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு என்பதாக செயல்பட்டிருக்கிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

* உ.பி.யை சேர்ந்தவர் தலைவராக நியமனம்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவராக நியமிக்கப்பட்ட நாகராஜன் வெங்கட்ராமன் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய தலைவராக டாக்டர் பிரசாந்த் லவானியாவை நியமனம் செய்து ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இவர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்.


Tags : Madurai AIIMS ,RTI ,Union Govt , Butter in one eye... Chalk in the other... Madurai AIIMS allocated only Rs 12.35 crore in 8 years: Shocking information revealed by RTI; Union Govt delegated to other states
× RELATED ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி...