×

டிஆர்டிஓ கண்டுபிடித்துள்ள கொரோனா மருந்து எப்போது சந்தைக்கு வரும்?…மத்திய அரசிடம் உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) கண்டுபிடித்துள்ள கொரோனா மருந்து எப்போது சந்தைக்கு வரும் என விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. கொரோனா தொற்றை குணப்படுத்தும் வகையில் 2 டிஜி ( 2-டியோக்சி-டி-குளுகோஸ் ) எனும் மருந்தை, இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கண்டு பிடித்துள்ளதாகவும், அதை சந்தைக்கு கொண்டு வரக் கோரி சென்னையைச் சேர்ந்த சரவணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.ஒரு ஆய்வகத்துக்கு மட்டும் இந்த மருந்தை உற்பத்தி செய்ய அனுமதியளித்துள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் தமிழ்ச்செல்வி அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், டி.ஆர்.டி.ஓ. எனும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கண்டுபிடித்த மருந்தை உற்பத்தி செய்வதற்கு இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்கள் அழைக்கப்பட்டுள்ளன. அதற்கு 40 நிறுவனங்கள் முன் வந்துள்ளன. அந்நிறுவனங்களின் தகுதி குறித்து ஆய்வு செய்ய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து எப்போது சந்தைக்கு வரும் என்பது குறித்து மத்திய அரசிடம் கேட்டு சொல்கிறேன் என்றார்.  அப்போது, வழக்கில் தன்னை இணைத்துக்கொண்ட ஆடிட்டர் வெங்கடசிவகுமார் என்பவர், 2 டிஜி மருந்து மூலம் 61 வயது முதியவர் இரு நாட்களில் குணமடைந்துள்ளார். இதை பெங்களூரை சேர்ந்த பிரபல மருத்துவர் கோபாலகிருஷ்ணன் என்பவர் உறுதி செய்துள்ளார் என்றார். இதையடுத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதில்,  ஆந்திரா மாநிலம், கிருஷ்ணாம்பட்டினத்தில் ஆனந்தய்யா என்பவர் கண்டுபிடித்த மருந்து மூலம் அரை மணி நேரத்தில் கொரோனா குணப்படுத்தப்படுவதாக செய்திகள் வெளிவந்தன. ஆந்திர உயர் நீதிமன்ற உத்தவின் அடிப்படையில் ஆந்திர அரசு அந்த மருந்தை ஆய்வுக்கு உட்படுத்தி நோயாளிகளுக்கு வழங்க அனுமதி அளித்துள்ளது. அந்த மருந்து தற்போது ஐசிஎம்ஆர் ஆய்வில் உள்ளதாக மத்திய அரசு வக்கீல் தெரிவித்துள்ளார்.சர்வதேச மருந்து மாபியாக்கள் காரணமாக ஆனந்தையாவின் மருந்துக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அங்கீகாரம் வழங்கியிருந்தால் ஆனந்தய்யா சர்வதேச அளவில் புகழடைந்திருப்பார். அவர் கண்டுபிடிப்பு ஆயுர்வேத மருந்துதான். மத்திய அரசும் ஆயுர்வேத மருந்துக்குத்தானே முன்னுரிமை வழங்கி வருகிறது.  எனவே, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கண்டுபிடித்துள்ள 2 டிஜி மருந்து உற்பத்தி எப்போது பிற நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்பது குறித்த விவரங்களையும், ஆனந்தய்யா கண்டுபிடித்த மருந்துக்கு எப்போது அங்கீகாரம் வழங்கப்படும் என்பது குறித்தும் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். கொரோனா நோய் தொடர்பான மருந்துகள் குறித்த தகவல்களை மனுதாரர், வழக்கில் இணைத்துக்கொண்டவர்கள் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யலாம். இந்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்….

The post டிஆர்டிஓ கண்டுபிடித்துள்ள கொரோனா மருந்து எப்போது சந்தைக்கு வரும்?…மத்திய அரசிடம் உயர்நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : central government ,Chennai ,Army Research and Development Organization ,DRDO ,Court ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...