×

பர்மா பஜாரில் வணிக வளாக கடைகளை கணக்கெடுத்து வாடகையை மீண்டும் திருத்தி அமைக்க மாநகராட்சி திட்டம்: நிலுவை தொகையை வசூலிக்கவும் முடிவு

சென்னை: பர்மா பஜார் வணிக வளாக கடைகளை கணக்கிட்டு  வாடகையை மீண்டும் திருத்தியமைக்க திட்டமிட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் பிரதான வருவாயான சொத்து வரி, தொழில் வரி, தொழில் உரிமை கட்டண, கேளிக்கை வரி, நிறுவன வரி வசூல் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடைகளுக்கு வசூலிக்கப்படும் மாத வாடகையை கொண்டு மாநகராட்சி பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான பொது சுகாதாரம், தூய்மை பணிகள், வளர்ச்சி பணிகள், மேம்பாலம் கட்டுதல், பூங்கா அமைத்தல், மின்விளக்குகளை பராமரித்தல், இயற்கை பேரிடர் காலங்களில் நிவாரண பணிகள் செய்தல், பெருந்தொற்று காலத்தில்  மருத்துவமனை அமைத்து பொதுமக்களுக்கு  இலவச மருத்துவ சேவை செய்தல் ஆகிய பணிகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையின் பிரதான பகுதியான ராஜாஜி சாலையில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. அதில் சுமார் 796 கடைகள் உள்ளன. கடைகளுக்கு கடந்த 1984 முதல் ஒரு கடைக்கான வாடகை ரூபாய் 20 லிருந்து சிறுக சிறுக உயர்த்தப்பட்டு வந்தது. கடைகளின் அளவீடுகள் வேறுபட்ட நிலையில் அனைத்து கடைகளுக்கும் ஒரே மாதிரியான வாடகை வசூல் செய்யப்பட்டு வந்தது. இதில் மாநகராட்சிக்கு வருமானம் கிடைத்து வருகிறது. இருந்தாலும், இதில் சில முரண்பாடுகள் உள்ளதால் இதனை சரிசெய்யும்  பொருட்டு சதுர அடி கணக்கில் வாடகை நிர்ணயம் செய்ய மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து கடந்த  2017 முதல் ஒரு சதுர அடிக்கு ரூபாய் 60 என நிர்ணயம் செய்து ஒவ்வொரு கடையின் அளவீடுகளுக்கு ஏற்ப வாடகை மாற்றி அமைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2019ல்  கடையின் உரிமையாளர்கள் நீதிமன்றத்திற்கு சென்றனர். வழக்கின் தீர்ப்பில் ₹60 நிர்ணயம் செய்தது சரியே எனக்கூறி வியாபாரிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, பர்மா தமிழ் மறுமலர்ச்சி சங்க உறுப்பினர்கள்
மாநகராட்சி ஆணையரை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து ராஜாஜி சாலையில் உள்ள கடையின் உரிமையாளர்கள் கூறியதாவது: எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கடைகளில் கட்டுமானம் ஏதும் இன்றி காலி இடமாக வழங்கப்பட்டது. அப்படி காலி இடங்களில் ஒவ்வொரு கடைகளும் சுமார் 16.5 சதுர அடி மற்றும் 17.5 சதுரடிகளில் சிறு சிறு கடைகளாகவே கட்டிக் கொண்டோம். ஒரு  சதுர அடிக்கு ₹60 என கடந்த 2017 முதல் திருத்தி அமைக்கப்பட்ட வாடகை  விவரத்தை மாநகராட்சி குறித்த நேரத்தில்  தெரியப்படுத்தவில்லை. இந்த விவரம் எங்களுக்கு 2019ல் தெரியவந்தது.கொரோனா  காலத்தில் பல நஷ்டங்கள் அடைந்தோம். மாதம் ₹500 அல்லது 600  நிர்ணயம் செய்தால் உதவியாக இருக்கும். மாநகராட்சி அதிகாரிகள் அழுத்தம் தரும்  பட்சத்தில் தொகையை செலுத்துவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும் என  வியாபாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.  சென்னையில் மற்ற பிரதான பகுதிகளான அண்ணா சாலை, தி.நகர், சிபி ராமசாமி சாலை மற்றும் அடையாறு ஆகிய பகுதிகளை ஒப்பிடுகையில் இங்கு வசூலிக்கப்படும் தொகை மிகவும் குறைவானது. ஒரு சதுர அடிக்கு வாடகை  ராராஜி சாலை, அதை அடுத்துள்ள இரண்டாவது கடற்கரை சாலை, தனியார்  கட்டிடங்களில் வாடகை ஒப்பந்த அடிப்படையில் கடை நடத்தும் சிலர் வணிகர்களிடம்  வாடகை குறித்து ஆய்வு மேற்கொண்டதில் ஒரு சதுர அடிக்கு சுமார் ₹70 முதல்  ₹80 ஒரு சில கடைகளுக்கு ₹110 என வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு  வசூலிக்கப்படுகிறது என்றனர்.

மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:ராஜாஜி சாலையில் உள்ள தெருவோர வணிக வளாக கடைகளுக்கு கடந்த 2017 முதல் அரசாணை நிலை எண் 92 மற்றும் மாமன்ற தீர்மானத்தின் அடிப்படையில் ஒரு சதுர அடிக்கு ₹60 வீதம் நிர்ணயம் செய்யப்பட்டது. இது ஒரு பகுதியாக திருத்தம் செய்து கடந்த 2015க்கு முன்பு வணிக வளாகங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாத வாடகையில் 15% உயர்த்தி வாடகை நிர்ணயம் செய்ததை ஒரு பகுதியாக திருத்தம் செய்து, சரக்கு மற்றும் சேவை கட்டணத்துடன் வசூலிக்கப்ப்டடது. இதுபோல், கடந்த 2017ம் பர்மா தமிழ் மறுமலர்ச்சி சங்க உறுப்பினர்களுக்கு உயர்த்தப்பட்ட வாடகையின் விவரம் முறையாக தெரிவிக்கப்படாததால்  அதை கருத்தில் கொண்டு 2015க்கு பிறகு 3 ஆண்டுக்கு ஒருமுறை வாடகையில் 15% உயர்த்தப்படவேண்டும் என்ற அடிப்படையில் 2018 ஏப்ரல் முதல் அவர்கள் கடைசியாக செலுத்தி வந்த மாத வாடகை ₹487க்கு 15% உயர்த்தி ₹560 என 1.4.2018  முதல் உயர்த்தி நிர்ணயம் செய்யவும், அதேபோல் அடுத்த 3 ஆண்டுகள் கடைசியாக நிர்ணயம் செய்யப்பட்ட மாத வாடகை தொகை ₹560ல் 15% விழுக்காடு உயர்த்தி சேர்த்தும் கடந்த 1.4.2021 முதல் ₹645 என நிர்ணயம் செய்யவும், நிர்ணயம் செய்யப்படும் வாடகை தொகையுடன் சரக்கு மற்றும் சேவைவரி கட்டணமாக 18% விழுக்காடு சேர்த்து வசூலித்திடவும், 2017ல் நிர்ணயம் செய்தது போல் ஒரு சதுர அடிக்கு ₹60 வீதம் கடையின் பரப்பளவிற்கு ஏற்ப கணக்கீட்டு வாடகையை மீண்டும் திருத்தி அமைக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு கடைகளுக்கான நிலுவை விவரங்களை அதன் உரிமையாளருக்கு அறிவிக்கப்பட்டு நிலுவை தொகை வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.


* மாநகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படும் மாநகராட்சி அதிகாரி கூறுகையில், ‘‘வியாபாரிகள் சொல்வது போல் செய்தால் மாநகராட்சிக்கு நிலுவை  தொகையில் பெருமளவு இழப்பீடு ஏற்படும். பிற மண்டலங்களில் உள்ள உரிமையாளர்கள்  கட்டணத்தை குறைக்க சொல்வார்கள். இதனால் மாநகராட்சிக்கு நிதி இழப்பு  அதிகளவில் ஏற்படும்’’ என்றார்.




Tags : Parma Bazaar , Corporation plan to survey mall shops in Parma Bazaar and revise rents: decision to collect dues
× RELATED ரூ.2 கோடி கொடுக்கல் வாங்கல் தகராறு...