×

அமைதியான ரயில் நிலையமானது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்: ஒலிபெருக்கிகள் துண்டிப்பு; டிஜிட்டல் திரையில் ரயில் வருகை, புறப்பாடு அறிவிப்பு

சென்னை: இந்தியாவில் முதல் முறையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், நேற்று முதல் அமைதியான ரயில் நிலையமாக மாறியுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 150 ஆண்டுகள் பழமையான ரயில் நிலையம் ஆகும். இங்கிருந்து 200 எக்ஸ்பிரஸ் ரயில்களை சென்ட்ரல் ரயில் நிலையம் கையாளுகிறது. தினமும் சராசரியாக 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர். ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் வசதிக்காக புறப்படும் ரயில்களின் எண், சேரும் இடம், புறப்படும் நேரம் மற்றும் நடைமேடை எண் போன்ற தகவல்கள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வந்தது.  அதேபோல் வெளியூர்களில் இருந்து வரும் ரயில்கள், புறப்பட்ட ஊர், ரயில் எண், வந்து சேரும் நேரம் மற்றும் நடைமேடை எண் போன்ற விவரங்களும் ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை `அமைதியான ரயில் நிலையம்’ என்று அறிவித்து தெற்கு ரெயில்வே உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் தெரிவித்திருந்ததாவது: சென்ட்ரல் ரயில் நிலையம் அமைதியான ரயில் நிலையமாக மாறுவதால் இனி ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்படாது. அதற்கு பதிலாக, ரயில்கள் புறப்பாடு, வருகை, ரயில் எண், நடைமேடை போன்ற விவரங்கள் டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பப்படும். எனவே அனைத்து டிஜிட்டல் தகவல் பலகைகளும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். பயணிகளின் வசதிக்காக தகவல் மையங்களில் போதுமான ஊழியர்களை அதிகாரிகள் நியமிக்க வேண்டும்’’ இவ்வாறு தெரிவிந்திருந்தார்.

அதன்படி சென்ட்ரல் ரயில் நிலையம் நேற்று முதல் அமைதியான ரயில் நிலையமாக மாறியது. விமான நிலையங்கள் போல, நிமிடத்துக்கு நிமிடம் ரயில்கள் குறித்த விவரங்கள் டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பானது. அதைப்பார்த்து பயணிகள் விவரங்களை தெரிந்து கொண்டு பயணம் செய்தனர். பயணிகளின் வசதிக்காக சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பஸ் நிறுத்தம், புறநகர் ரயில் முனையம், வால்டாக்ஸ் சாலையில் 5-ம் எண் கேட் ஆகிய 3 நுழைவு பகுதிகளிலும் தமிழ், ஆங்கிலம், இந்தியில் ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடுகளை காட்டும் பெரிய டிஜிட்டல் திரைகள் வைக்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக நுழைவாயிலில் பிரெய்லி எழுத்துக்களுடன் கூடிய வரைபடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவை அவர்களுக்கு வழிகாட்டுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள் சைகை மொழி வீடியோ மூலம் அறிய கியூஆர் குறியீடுகள் ஒட்டப்பட்டுள்ளன.

Tags : Railway Station ,Chennai Central Railway Station , Quiet Railway Station Chennai Central Railway Station: Loudspeakers cut off; Train arrival, departure notification on digital screen
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!