×

காஞ்சியில் லைசென்ஸ் வழங்க லஞ்சம் உதவி பொறியாளர் உள்பட 2 பேர் கைது

சென்னை: காஞ்சிபுரத்தில் அரசு போக்குவரத்து வாகனங்களுக்கு ஸ்பேர் பார்ட்ஸ் சப்ளை செய்யும் ஆட்டோமொபைல் கடைக்கு லைசென்ஸ் வழங்க, லஞ்சம் வாங்கிய அரசு போக்குவரத்து தானியங்கி பணிமனை உதவி பொறியாளர் மற்றும் சார்ஜ்மேன் முரளி ஆகியோர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அரசு வாகனங்களுக்கான தானியங்கி பணிமனை மையம் காஞ்சிபுரத்தை அடுத்த சிறுகாவேரிப்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பணிமனை மூலமாக அரசு வாகனங்களுக்கான ஸ்பேர் பார்ட்ஸ் சப்ளை செய்ய திருத்தணியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் லைசென்ஸ் பெற்று, ஸ்பேர் பார்ட்ஸ் சப்ளை செய்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு லைசென்ஸ் முடிவடைந்த நிலையில், லைசென்ஸ் புதுப்பிக்க சென்னையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பழுதுபார்த்தல் மையத்தில் விண்ணப்பம் செய்துள்ளார். 2 முறை விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் சிறுகாவேரிப்பாக்கத்தில் உள்ள அலுவலக உதவி பொறியாளர் மோகனிடம் கேட்டபோது, ரூ.30 ஆயிரம் பணம் கொடுத்தால் லைசென்ஸ் கிடைக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார். எனவே, இதுகுறித்து ஆட்டோ மொபைல் கடை உரிமையாளர் வெங்கடேசன் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து, அதனை கொடுக்குமாறு தெரிவித்துள்ளனர்.

அதன்படி வெங்கடேசன், நேற்று மாலை சிறுகாவேரிப்பாக்கத்தில் உள்ள அரசு வாகன தானியங்கி பணிமனை மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு சார்ஜ்மேன் முரளி என்பவரிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்துள்ளார். அதனை சார்ஜ்மேன் முரளி, உதவி பொறியாளர் மோகனிடம் கொடுத்துள்ளார். இதனை மறைந்திருந்து ரகசியமாக கண்காணித்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன், இன்ஸ்பெக்டர்கள் கீதா, அண்ணாதுரை ஆகியோர் கையும் களவுமாக உதவி பொறியாளர் மோகன் மற்றும் சார்ஜ்மேன் முரளி ஆகிய இருவரையும் பிடித்தனர். இதனைதொடர்ந்து, இருவரையும் கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரொக்கப்பணம் ரூ.30 ஆயிரத்தை பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kanchi , 2 people including assistant engineer arrested for bribe to issue license in Kanchi
× RELATED கருடன் கருணை