×

சென்னை விமான நிலையத்தில் அபாயகரமான அரிய வகை பல்லி, குள்ள நரி பறிமுதல்: ஒருவர் கைது

சென்னை: கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட அபாயகரமான அரிய வகை பல்லி, குள்ள நரியை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  அவற்றை மீண்டும், மலேசியாவுக்கு திருப்பி அனுப்பினர். சென்னையைச் சேர்ந்த கடத்தல் பயணியை கைது செய்து விசாரிக்கின்றனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த ஒரு பயணி பெரிய பிளாஸ்டிக் கூடைகள் இரண்டு எடுத்து வந்தார். சுங்க அதிகாரிகள் சந்தேகத்தில் அந்த பயணியை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதையடுத்து அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் கூடைகளை சோதனையிட்டனர். அதில் அபூர்வ வகை வெளிநாட்டு விலங்கு, ஊர்வன இருப்பதை கண்டுபிடித்தனர்.

ஒரு கூடையில், ``தேகு லிஷார்டு” எனப்படும் ராட்சஷ விஷ பல்லி  குட்டிகள் 4 இருந்தன. இந்த ராட்சஷ பல்லி வகைகள் பிரேசில், தென் அமெரிக்கா, வட அர்ஜென்டினா போன்ற நாடுகளில் அடர்ந்த வனப் பகுதிகளில் வசிப்பவை. இவைகள் ஐந்து அடி நீளம் வரை வளரக்கூடியவை. மற்றொரு கூடையில் அரியவகை குள்ள நரி, ஒன்று இருந்தது. இவை வட அமெரிக்கா வனப்பகுதியில் வசிப்பவை. அதிகபட்சம் இரண்டரை அடி உயரம் வளரக்கூடியவை. ஆனால் எடை 5  கிலோவில் இருந்து 26 கிலோ வரை இருக்கும். இது கொடூரமாக தாக்கும் தன்மையுடையது. இதையடுத்து சுங்க அதிகாரிகள் அந்த பயணியை ஒரு அறையில் அடைத்து வைத்து,  அவரிடமிருந்த அபூர்வ வகை வெளிநாட்டு குரங்கு, பல்லியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து,  சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஒன்றிய வன விலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவு, போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்வையிட்டு விட்டு, இவைகள் ஐந்துமே மிகவும் ஆபத்தானவை. மேலும் நோய்க்கிருமிகள் அதிகமாக இருக்கக் கூடியவை.

இதனால் இவற்றை இந்தியாவுக்குள் அனுமதிக்க முடியாது. இவற்றை சட்ட விரோதமாக கடத்தி வந்த அந்த பயணியை கைது செய்வதோடு, மீண்டும் மலேசிய நாட்டிற்கு எந்த விமானத்தில் வந்ததோ அதே விமானத்தில் திருப்பி அனுப்ப வேண்டும். அதற்கான செலவுகளை, அதை கடத்தி வந்து கைது செய்யப்பட்டுள்ள பயணியிடம் வசூலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். பின்னர், சுங்க அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, அபாயகரமான இந்த விலங்குகளை மலேசியாவில் இருந்து சட்ட விரோதமாக கடத்தி வந்த சென்னை பயணியை கைது செய்தனர். பின்னர், குரங்கு, பல்லிகளை நேற்று மதியம் சென்னையில் இருந்து  கோலாலம்பூர் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில்,  அதே நாட்டுக்கு திருப்பி அனுப்பினர்.  கடத்தல் பயணியிடம் சுங்க அதிகாரிகளும் ஒன்றிய வனவிலங்குகள் பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகளும் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.



Tags : Chennai airport , Dangerous rare species of lizard, dwarf fox seized at Chennai airport: One arrested
× RELATED சென்னை விமானநிலையத்தில் 267 கிலோ தங்கம்...