சென்னை: ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகளை, விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். செயற்குழு கூட்டத்தில் தேசிய தலைவர் எம்.கே.பைஸி, தேசிய செயற்குழு உறுப்பினர்கள் தெஹ்லான் பாகவி, முகைதீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாநில துணைத் தலைவர்கள் எஸ்.எம்.ரஃபீக் அகமது, அப்துல் ஹமீது, பொதுச்செயலாளர்கள் அகமது நவவி, அச.உமர் பாரூக், நிஜாம் முகைதீன், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் நஸூருத்தீன், பொருளாளர் எஸ்.அமீர் ஹம்சா, செயலாளர்கள் டி.ரத்தினம், அபுபக்கர் சித்திக், ஏ.கே.கரீம், நஜ்மா பேகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழக சிறைகளில் நீண்ட நாள் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் ஆயுள் சிறைக் கைதிகளை பாரபட்சமின்றி, வயதுமுதிர்வு, உடல்நலன், குடும்பச் சூழல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் வயது முதிர்ந்த, நோய்வாய்ப்பட்டுள்ள சிறைவாசிகளை விடுதலை செய்ய முன்வர வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
