×

துபாய், இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட ₹1.58 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: விமான நிலைய ஊழியர் உள்பட 3 பேர் கைது

சென்னை:  சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு பயணி, அவருடைய சூட்கேசில் மறைத்து வைத்திருந்த தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். அதேபோல், இலங்கையிலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமான பயணிகளை சோதனையிட்டபோது, இலங்கையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த தங்க பசை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இரண்டு பயணிகளிடம் இருந்தும், ₹43 லட்சம் மதிப்புடைய 800 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் கைப்பற்றி, இரு பயணிகளையும் கைது செய்தனர்.

இதற்கிடையே சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பணி முடிந்து வெளியில் சென்று கொண்டிருந்த விமான நிலைய ஊழியர்களை, சோதனை செய்தபோது, ஹவுஸ் கீப்பிங் ஊழியர் ஒருவர், அவருடைய பேண்ட் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்திருந்த தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். அவைகள் 2.3 கிலோ. அதன் சர்வதேச மதிப்பு ₹1.15 கோடி. இதையடுத்து விமான நிலைய ஊழியரையும், சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனைகளில் ₹1.58 கோடி மதிப்புடைய 3.158 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, விமான நிலைய ஊழியர், இலங்கை பயணி உள்பட 3 பேரை கைது செய்தனர்.



Tags : Dubai ,Sri Lanka , ₹1.58 crore worth of gold smuggled from Dubai, Sri Lanka seized: 3 arrested, including airport staff
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...