×

அண்ணா நகர், மாதவரம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் : அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் சத்யா நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து  சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகள் அமைத்திருந்தனர். இதுகுறித்து, அதிகாரிகள் பலமுறை அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் கொடுத்து உடனே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுமாறு வலியுறுத்தினர். ஆனால்,  ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றப்படவில்லை.
இதையடுத்து நேற்று ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்கு பொக்லைன் இயந்திரங்களுடன்    அண்ணாநகர் 8வது மண்டல உதவி பொறியாளர் அசோக்குமார் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் வந்தனர். இதை பார்த்து அப்பகுதி மக்கள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற விடாமல் அதிகாரிகளிடம் சுமார் 2 மணி நேரம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முடியாமல் அதிகாரிகள்  அவதிப்பட்டனர். பின்னர், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அண்ணாநகர் போலீசாரை உதவிக்கு அழைத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் கோபாலகுரு தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பொதுமக்களிடம் சமரசம் செய்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொண்டனர். பின்னர் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற பொதுமக்கள் சம்மதித்தனர். இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றினர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திருவொற்றியூர்: மாதவரம் மண்டலம் 28வது வார்டு, தபால் பெட்டி சாலையில் சாலையோர கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து மாதவரம் மண்டல உதவி ஆணையர் முருகன், செயற்பொறியாளர்கள் சுந்தரேசன், சின்னத்துரை, உதவி செயற்பொறியாளர் முத்தமிழ், உதவி பொறியாளர் உஷா கொண்ட குழுவினர் நேற்று தபால் பெட்டி சாலைக்கு வந்தனர். ஆக்கிரமிப்பு கடை முகப்புகள், படிக்கட்டுகள், சாலை ஓரங்களில் இருந்த தள்ளுவண்டிகடிள போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் மூலம் அப்புறப்படுத்தினர். அப்போது, வியாபாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஒரு வார கால அவகாசத்துக்குள் ஆக்கிரமிப்புகள் இருந்தால், அதனை நாங்களே அகற்றிக் கொள்கிறோம் என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.

Tags : Anna Nagar ,Madhavaram highway , Removal of encroachment shops on Anna Nagar, Madhavaram highway: Traders argue with officials
× RELATED ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் ஆற்றல்...