×

தரமான மருத்துவம் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் ரூ.1,136 கோடியில் 44 மருத்துவமனைகளுக்கு மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்: முதல்வர் காலை உணவு திட்டம் உள்ளிட்ட 7 திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

சென்னை: சிறந்த தரமான மருத்துவம் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் ரூ.1,136 கோடியில், 44 மருத்துவமனைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார். மற்றும் முதலமைச்சர் காலை உணவு திட்டம் உள்ளிட்ட ‘ஏற்றமிகு 7 திட்டங்களை’யும் தொடங்கி வைக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் “ஏற்றமிகு 7 திட்டங்களின்” கீழ் புதிய திட்டங்களை இன்று தொடங்கி வைத்தும், பல்வேறு மருத்துவமனை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பணி நியமன ஆணைகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாள் முதல் சமுதாயத்தின் விளிம்புநிலை மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, இதுவரை அரசால் வழங்கப்பட்டு வந்த மாதாந்திர உதவித்தொகையை ரூ.1,000ல் இருந்து, ரூ.1,500ஆக உயர்த்தி வழங்கியது. அதேபோல் கிராமப்புற, நகர்ப்புற பகுதிகளில் பள்ளி செல்லும் குழந்தைகளின் நலனுக்காக “முதலமைச்சர் காலை உணவு திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன்மூலம் பள்ளியில் மாணவ மாணவிகளின் இடைநிற்றல் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு தவிர்க்கப்பட்டுள்ளது.

அதேபோன்று அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்துத்துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்ற அடிப்படையில், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம், நான் முதல்வன் திட்டம், நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டம், சிற்பி திட்டம், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் இயக்கம்,  புதுமைப்பெண் உயர் கல்வி உறுதி திட்டம், விவசாயிகளின் வாழ்வு மலர்ந்திட 1.50 லட்சம் மின் இணைப்பு வழங்கும் திட்டம், மகளிருக்கு இலவச பேருந்து பயண சலுகை, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், கள ஆய்வில் முதல்வர் திட்டம், தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டம், வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை, உயரிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம் திட்டம், ஒலிம்பிக் தங்கவேட்டை திட்டம், மதுரையில் கலைஞர் நூலகம், அயலக தமிழர்கள் நல வாரியம் போன்ற எண்ணற்ற திட்டங்களை தீட்டி அரசு செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டங்களின் விரிவாக்கமாக இன்று (28ம் தேதி) சென்னை அண்ணா  நூற்றாண்டு நூலக அரங்கில், இன்று காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநலத்துறை மூலம் சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்ட தொடக்க விழா, திருநங்கைகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்குதல், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனை பட்டா வழங்கும் விழா, நகராட்சி நிர்வாக துறை மூலம் தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற தனியாருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், சிறந்த தரமான மருத்துவம் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் ரூ.1,136 கோடியில் 44 மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் பெரும் வரவேற்பை பெற்ற முதலமைச்சர் காலை உணவு திட்டம், மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யும் திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.இந்த நிகழ்ச்சியில்  அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர், எம்பி, எம்எல்ஏக்கள் அரசு துறை செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.

Tags : MK Stalin ,Chief Minister , MK Stalin today lays foundation stone for 44 hospitals at a cost of Rs 1,136 crore to make quality healthcare available to people of all walks of life: CM launches 7 schemes including breakfast scheme
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...