×

வடகிழக்கில் தேர்தல் அமைதியாக முடிந்தது மேகாலயாவில் 75%, நாகலாந்தில் 82%: மார்ச் 2ம் தேதி வாக்குகள் எண்ணிக்ைக

ஷில்லாங்: வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகலாந்தில் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் அமைதியாக நேற்று நடந்து முடிந்தது. இதில் மேகாலயாவில் 75 சதவீத வாக்குகளும், நாகலாந்தில் 82 சதவீத வாக்குகளும் பதிவாகின. வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்தில் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முடிவதையொட்டி, 3 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் கடந்த 16ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து, மேகாலயா மற்றும் நாகலாந்தில் நேற்று ஒரே நாளில் தேர்தல் நடந்தது. இவ்விரு மாநிலங்களிலும் தலா 60 தொகுதிகள் உள்ளன. இதில் இரு மாநிலத்திலும் தலா 59 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மேகாலயாவில் பலமுனைப் போட்டி நிலவுகிறது. இங்கு ஆளும் தேசிய மக்கள் கட்சியை (என்பிபி) எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ், பாஜ, காங்கிரஸ், ஐக்கிய ஜனநாயக கட்சி (யுடிபி) கட்சிகள் போட்டியிடுகின்றன. மாநில முதல்வர் கான்ராட் சங்மா, துரா தொகுதியில் மக்களோடு மக்களாக நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். 21.6 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மாலை 4 மணி வரை நடந்த வாக்குப்பதிவில் மொத்தம் 74.32 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இங்கு காங்கிரஸ், பாஜ கட்சிகள் 59 தொகுதிகளிலும், என்பிபி 56 தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் 57 தொகுதிகளிலும் யுடிபி கட்சி 46 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளன. கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் 21 இடங்களில் வென்றாலும், என்பிபி கட்சி 18 இடங்களை மட்டுமே வென்று பாஜ உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தது.

ஆனால் தற்போது இந்த கூட்டணி முறிந்திருந்தாலும், தேர்தல் முடிவுக்கு பின்னர் மீண்டும் பாஜவுடன், என்பிபி கூட்டணி சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாகலாந்திலும் 60 தொகுதிகளில் 59 தொகுதிகளில் தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது. இங்கு, ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் (என்டிபிபி) பாஜ கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. நாகா மக்கள் முன்னணியுடன் (என்பிஎப்) காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. மாநில முதல்வர் நிபியு ரியோ கோஹிமா தொகுதியில் தனது வாக்கை செலுத்தினார். இம்மாநிலத்தில் மொத்தம் 81.94 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் முடிந்ததைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்டு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. இதன் மூலம் வடகிழக்கில் 3 மாநிலங்களிலும் தேர்தல் நிறைவடைந்துள்ளது. இதில் பதிவான வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படும்.

* கருத்து கணிப்பு முடிவுகள் நாகலாந்து, திரிபுராவில் பாஜ ஆட்சி மேகாலயாவில் குழப்பம் தோ்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டன. இதன்படி, திரிபுராவில் மீண்டும் பாஜ ஆட்சியை கைப்பற்றும் என  தெரிவித்துள்ளன. காங்கிரஸ், இடதுசாரி கூட்டணி தோல்வியை தழுவும் என கணிக்கப்பட்டுள்ளது. 60 தொகுதிகளில் பாஜ 36-45 தொகுதிகளையும், காங்கிரஸ் கூட்டணி 6-11 இடங்களையும் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. இதே போல மேகாலயாவில் யாருக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காமல், தொங்கு சட்டப்பேரவை அமையும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆளும் என்பிபி 18-24 இடங்களையும், பாஜ 4-8, காங்கிரஸ் 6-12 இடங்களை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. நாகலாந்தில் பாஜ கூட்டணி 35-43 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என கூறப்பட்டுள்ளது. என்பிஎப்-காங்கிரஸ் கூட்டணி 1-3 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

Tags : North East ,Meghalaya ,Nagaland , Elections in North East go peacefully Meghalaya 75%, Nagaland 82%: Counting of votes on March 2
× RELATED வட கிழக்கு டெல்லியில் கன்னையா குமார் போட்டி: காங். அறிவிப்பு