ஏழைக் குழந்தைகளுக்கு இலவச இதய அறுவைச் சிகிச்சை செய்வதற்காக சன் பவுண்டேஷன் ₹1.30 கோடி நிதி உதவி அளித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக, ஏழை எளியோரின் கல்வி, மருத்துவச் சிகிச்சை, சமூக மேம் பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டி.வி. பல்வேறு அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அப்பல்லோ மருத்துவமனையில் செயல்பட்டு வரும் சாச்சி அறக்கட்டளை மூலம் 130 ஏழைக் குழந்தைகளுக்கு இலவச இதய அறுவைச் சிகிச்சை செய்வதற்காக அந்த மருத்துவமனைக்கு சன் டி.வி. ₹ 1.30 கோடி நிதி உதவி அளித்துள்ளது. இதற்கான காசோலையை, அப்பல்லோ மருத்துவமனை குழுமத் துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி உள்ளிட்ட நிர்வாகிகளிடம் சன் பவுண்டேஷன் சார்பில் காவேரி கலாநிதி மாறன் வழங்கினார்.
இந்த நிதியின் மூலம் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்தனர். ஏழை எளியோருக்கு கல்வி, அரசுப் பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்புகள் மற்றும் கற்றல் சூழலை மேம்படுத்துதல், தரமான இலவச சிகிச்சை, மகளிர் மற்றும் இளைஞர் நலன், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக சன் டிவியும் சன் பவுண்டேஷனும் தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகின்றன. இத்திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டி.வி. இணைந்து இதுவரை சுமார்177 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
