×

நேர்மையான கட்சி என்கிற ஆம் ஆத்மியின் பிம்பம் உடைகிறதா? கெஜ்ரிவால் டிவிட்

* 2 அமைச்சர்கள் உள்ளே.. 4 பேர் வெளியே..
* பட்ஜெட்டை தாக்கல் செய்ய போவது யார்?
* என்ன செய்யப்போகிறார் முதல்வர் கெஜ்ரிவால்
* டெல்லி அரசியலில் பரபரப்பு

புதுடெல்லி: அன்னா அசாரே தொடங்கிய ஊழல் ஒழிப்பு இந்தியா இயக்கத்தின் முக்கிய தளகர்த்தாக்களாக இருந்தவர்களில் முக்கியமானவரான கெஜ்ரிவால், ஆம்ஆத்மி கட்சி தொடங்கி டெல்லியில் ஆட்சியை பிடித்தார். ஆம் ஆத்மியின் வருகை காங்கிரசை காலி செய்தது மட்டுமின்றி டெல்லியில் பாஜவின் ஆட்சிக் கனவையும் சுக்கு நூறாக்கியது. இதன் காரணமாக நேர்மையான கட்சி என்கிற ஆம் ஆத்மியின் பிம்பத்தை உடைக்க பாஜ தனக்கான வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருந்தது. அந்த முயற்சியில் முதல் விக்கெட் ஆக விழுந்தார் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின். அடுத்ததாக தற்போது சிசோடியா.

இந்த வரிசை இன்னும் தொடருமா என்பதை வரும் நாட்கள் உணர்த்தும். அமைச்சர் ஜெயின் கைது செய்யப்பட்ட பின் அவரிடம் இருந்த சுகாதாரம், பொதுப்பணித்துறை உள்ளிட்டவற்றையும் சிசோடியாவிடமே கெஜ்ரிவால் ஒப்படைத்து இருந்தார். சிபிஐயின் அடுத்த குறியில் சிசோடியாவும் சிக்கி கைது செய்யப்பட்டதன் மூலம், அமைச்சர்கள் ஜெயின் மற்றும் சிசோடியா ஆகியோர் கவனித்து வந்த துறைகளை வேறொரு அமைச்சர் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். டெல்லியை பொறுத்தவரை அமைச்சரவையின் அதிகபட்ச எண்ணிக்கை 6 மட்டுமே.

கடந்த மே மாதம் ஜெயின் கைது செய்யப்பட்டபோதும் அவரை அமைச்சர் பதவியிலிருந்து கெஜ்ரிவால் நீக்க மறுத்துவிட்டார். இதனால் திகார் சிறையில் இருக்கும் ஜெயின் இன்று வரை இலாகா இல்லாவிட்டாலும் அமைச்சர் பொறுப்பில் தொடர்கிறார். கெஜ்ரிவாலுக்கு அடுத்ததாக நெம்பர் 2 இடத்தில் இருப்பவர் சிசோடியா. அவரையும் கெஜ்ரிவால் அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இதனால் இதுவரை இலாகா இல்லாமல் முதல்வராக இருந்து வரும் கெஜ்ரிவால் தனது பொறுப்பில் சில துறைகளை நேரடியாக எடுத்துக்கொண்டு கவனிக்க வேண்டி வரும்.

அல்லது, கிட்டதட்ட சிசோடியா வசம் மட்டுமே இருந்த 18 துறைகளை ஏற்கனவே உள்ள மற்ற நான்கு அமைச்சர்களுக்கு பகிர்ந்து அளிக்கலாம். அடுத்த வாய்ப்பு, கைதாகியுள்ள இரண்டு அமைச்சர்களை நீக்கிவிட்டு வேறு இரண்டு அமைச்சர்களை புதிதாக நியமிப்பது மட்டுமே. ஒருவேளை கெஜ்ரிவால் தன்வசம் சில இலாக்காக்களை எடுத்துக்கொள்ளும்பட்சத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை, ஒன்றிய அரசு, ஆளுநர் மட்டுமின்றி பாஜ, காங்கிரஸ் கட்சிகளின் கழுகு பார்வைக்குள் கண்காணிக்கப்படுவார்.  

ஆம் ஆத்மியின் தொடர் வெற்றிக்கு அக்கட்சி டெல்லியில் கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் பெரும் மாற்றங்களை கொண்டு வந்தது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு துணைகளை கவனித்து வந்த சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் இருவரும் தற்போது சிறைக்கு அனுப்பப்பட்டுவிட்டனர். இதனால் படைத்தளபதிகள்  இல்லாது தனித்துவிடப்பட்ட மன்னனாக நின்று கொண்டிருக்கிறார் கெஜ்ரிவால். டெல்லி அரசின் பட்ஜெட்டை திட்டமிட்டபடி சமர்ப்பித்து, சிசோடியாவுகான மாற்று யார் என்பதை கண்டுபிடிப்பதே கெஜ்ரிவாலுக்கு முன்பு உள்ள உடனடி சவால். ஊழலுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியை கெஜ்ரிவால் தொடங்கினார். ஆனால் தற்போது அவரது அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் நேர்மையான கட்சி என்ற பிம்பம் உடைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கத்தால் போடப்பட்டுள்ளதா அல்லது உண்மையில் ஊழல் நடந்துள்ளதா என்பது மதுபான கொள்கை முறைகேடு வழக்கின் இறுதி தீர்ப்பில் தெரிந்துவிடும்.
 
* பெரும்பாலான சிபிஐ அதிகாரிகள் எதிர்ப்பு அரசியல் அழுத்தத்தால் சிசோடியா கைது
முதல்வர் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பதிவில் கூறும்போது, ‘‘விசாரணைக்கு ஆஜரான துணை முதல்வர் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர். போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால் அவரை கைது செய்வதற்கு பெரும்பாலான சிபிஐ அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் தங்களது எஜமானர்களுக்கு கீழ் படிய வேண்டிய கட்டாயம் சிபிஐ அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் அரசியல் அழுத்தம் காரணமாகவே இந்த கைது நடவடிக்கையை சிபிஐ மேற்கொண்டுள்ளது’’ என்று அவர் அதில் பதிவிட்டிருந்தார்.

முக்கிய அம்சங்கள்
* டெல்லி அரசின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளபடி 33 துறைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், சுகாதாரம், கல்வி, பொதுப்பணித்துறை, சேவைகள், நிதி, மின்சாரம், வீடு மற்றும் நகர்ப்புற மேம்பாடு உட்பட 18 துறைகளை சிசோடியா கவனித்து வருகிறார். குறிப்பாக எந்த அமைச்சருக்கும் ஒதுக்கப்படாத மற்ற அனைத்து துறைகளும் அவர் வசமே உள்ளது.
* கெஜ்ரிவாலைத் தவிர, டெல்லி அரசில் ஆறு கேபினட் அமைச்சர்கள் உள்ளனர்.
* சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய்க்கு மூன்று துறைகள் மட்டுமே உள்ளன.
* பணமோசடி வழக்கில் கடந்த ஆண்டு அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்ட, சிறையில் உள்ள சத்யேந்தர் ஜெயின் இன்னும் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்கிறார்.
* அமைச்சர் இம்ரான் ஹுசைன், உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் மற்றும் தேர்தல் ஆகிய இரண்டு துறைகளை மட்டுமே கவனித்து வருகிறார்.
* கைலாஷ் கெலாட், வருவாய் மற்றும் போக்குவரத்து உட்பட ஆறு துறைகளுக்குப் பொறுப்பு வகிக்கிறார்.
* அமைச்சர் ராஜ் குமார் ஆனந்துக்கு நான்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

* சிசோடியாவுக்கு 5 நாள் சிபிஐ காவல்
புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான டெல்லி துணை முதல்வர் சிசோடியா நேற்று மாலை 3.30 மணிக்கு டெல்லி ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.கே.நாக்பால் முன்னிலையில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார். சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ‘‘இந்த விவகாரத்தில்  சிசோடியாவை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். இந்த வழக்கில் சிசோடியாதான் முதல் குற்றவாளி’’ என வாதிட்டார்.

சிபிஐ தரப்பு வாதத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சிசோடியா தரப்பு மூத்த வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன், ‘‘இந்த விவகாரத்தில் சிசோடியாவிடம் சோதனை நடத்தப்பட்டபோது அவரது மொபைல் போன் சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. அதில் இருந்து எதையும் கண்டுபிடிக்கவில்லை. மேலும் டெல்லி துணை நிலை ஆளுநரின் அனுமதி கையெழுத்தும் பெறப்பட்டுள்ளது. அதன் பின்னர் தான் புதிய மதுபான கொள்கை அமலுக்கு கொண்டு வரப்பட்டது. அப்படி இருக்கும் போது இதில் எவ்வாறு முறைகேடு நடக்க முடியும்’’ என காரசார வாதங்களை முன்வைத்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.கே.நாக்பால், சிபிஐ தரப்பு கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்து மார்ச் 4ம் தேதி வரையில் 5 நாட்கள் சிசோடியாவை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்குவதாக உத்தரவிட்டார். இதையடுத்து சிசோடியா சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு  அழைத்து செல்லப்பட்டார்.


Tags : Aam Aadmi ,Kejriwal , Is Aam Aadmi's image of an honest party breaking? Kejriwal Div
× RELATED நேற்று மாலை முதல் எரிகிறது; டெல்லி...