×

தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக திகழ செய்வதே என் இலக்கு எனது பிறந்தநாளில் பேனர், ஆடம்பர விழாக்களை தவிர்க்க வேண்டும்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு ஒருநாள் பரப்புரை செய்யும் திட்டத்துடன் ஈரோட்டுக்குப் பயணமானேன். ஆண் ஒருவர் தன் குழந்தையுடன் நின்றார். சென்னையில் பணிகளை முடித்துவிட்டு, கோவை வந்து, அங்கிருந்து ஈரோடு பயணிப்பதால், தொடர்ச்சியான பணிகளுக்கிடையே நான் சாப்பிட்டிருப்பேனோ இல்லையோ என்ற நினைப்பில், பிரைடு ரைஸ் வாங்கி வைத்து, அதைத் தன் மகள் கையால் கொடுக்கச் செய்த அந்தத் தமிழரின் அன்பினில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உணர்வைக் கண்டேன்.

அவருடைய பெண் குழந்தை என்னிடம் உணவுப் பொட்டலத்தைத் தந்ததுடன், “அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே தாத்தா” என்று வாழ்த்துகளைப் பகிர்ந்த போது நெகிழ்ந்து போனேன். ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறுவது இடைத்தேர்தல் தான் என்றாலும், அது திமுகவின் திராவிட மாடல் ஆட்சி பற்றி மதிப்பீட்டிற்கான எடைத் தேர்தல் என்பதால் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளருக்கு மகத்தான வெற்றியை உறுதி செய்திடும் வகையில் உழைப்பு தொடர்ந்தது.

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான முத்துசாமியின் மேற்பார்வையில், திமுகவின் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் எனப் பலரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணியாற்ற நியமிக்கப்பட்ட நிலையில், அவர்களின் அயராத உழைப்புடன், நியமிக்கப்படாத நிர்வாகிகளும் கூட ஆர்வத்துடன் வந்திருந்து, இது எங்களின் கழகத்திற்கு நாங்கள் செய்கிற பணி என்று உரிமையுடன் களப்பணியாற்றிய செய்திகளை அறிந்து மகிழ்ந்தேன்.

10 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக எதிர்க்கட்சி வரிசையில் திமுக இருந்தபோதும், மக்களின் நம்பிக்கைக்குரிய இயக்கமாகத் திகழ்ந்தது. மக்களின் பக்கம் நின்றது. அவர்களுக்காகப் போராடியது. அதனால் தான், தங்கள் நம்பிக்கையை வாக்குகளாக வழங்கி, நம்மை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தியிருக்கிறார்கள். தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் திகழ வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு. தமிழ்நாடு அத்தகைய நிலையை அடைவதுடன், இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மைச் சிதையாமல், ஒருமைப்பாடு குலையாமல், மதநல்லிணக்கம் மிக்க ஜனநாயகம் தழைத்தோங்கும் நிலை மீண்டும் உருவாக வேண்டும் என்பதே திமுகவின் நோக்கமாகும்.

என்னுடைய 70வது பிறந்தநாள் என்பது அதற்கான ஒருங்கிணைப்பை உருவாக்கக்கூடிய ஒரு வாய்ப்பு என்பதைத் தவிர, வேறு வகையான ஆடம்பரங்களையோ, ஆர்ப்பாட்டங்களையோ நான் ஒருபோதும் விரும்புவதில்லை. பிறந்தநாள் விழா என்ற பெயரில் பேனர் வைப்பது, அலங்காரங்கள் செய்வது, ஆடம்பர விழாக்களை நடத்துவது என்பதை அறவே தவிர்க்க வேண்டும் என்பதை இப்போதல்ல, இளைஞரணிச் செயலாளராக இருந்தபோதிருந்தே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். எளிமையான முறையில் திமுகவின் இருவண்ணக் கொடியை ஏற்றி, ஐம்பெரும் கொள்கை முழக்கமிட்டும், ஏழை, எளியவர்களுக்கு நல உதவிகள் செய்தும், திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கியும் பயன்தரும் வகையில் செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோளாகும்.

திமுக தலைவர் என்ற முறையில் தான் என்னுடைய பிறந்தநாள் விழாவுக்கு திமுகவினராகிய உங்களுக்கு இந்தளவில் அனுமதி வழங்குகிறேன். சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் மார்ச் 1ம்தேதி அன்று மாலையில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்கு திமுக பொதுச் செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். திமுக பொருளாளர், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வரவேற்புரை ஆற்றுகிறார்.

சிறப்புமிக்க அந்தப் பொதுக்கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா, உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், பீகார் மாநில துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் என இந்திய அளவிலான தலைவர்கள் உரையாற்றுகிறார்கள். நாட்டின் ஒற்றுமையையும், பன்முகத்தன்மையையும், அரசியல் சாசனம் வழங்கியுள்ள ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்புடன் அதற்கான எதிர்காலச் செயல்திட்டத்தை முன்னெடுக்கும் இந்தப் பொதுக்கூட்டத்தில் நான் ஏற்புரையாற்றுகிறேன். மா.சுப்பிரமணியன் நன்றியுரை ஆற்றுகிறார்.

உங்களில் ஒருவனான என்னுடைய 70வது பிறந்தநாளில் திமுக உடன்பிறப்புகளான உங்கள் ஒவ்வொருவரின் அன்பான வாழ்த்துகளையும் மனம் உவந்து ஏற்றுக் கொள்வதுடன், திராவிடக் கருத்தியலின் அடிப்படை நோக்கங்களான சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மாநில உரிமை இவற்றைத் தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய ஒன்றிய அளவில் நிலைநாட்டிடும் ஜனநாயக அறப்பணியில் நாம் அனைவரும் இணைந்து நின்று, தொடர்ந்து உழைத்திட வேண்டும் என விரும்புகிறேன்.

நம்முடன் கொள்கைத் தோழமை கொண்டுள்ள இயக்கங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம். ‘தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்குவோம். இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காப்பாற்றுவோம்’ என்பதே உங்களில் ஒருவனான உங்களின் முதன்மைத் தொண்டனான என்னுடைய பிறந்தநாள் செய்தி. அதற்கேற்ப அயராது உழைத்திட ஆயத்தமாக இருக்கிறேன். லட்சிய உணர்வு கொண்ட உங்களின் ஒத்துழைப்பையே சிறந்த வாழ்த்துகளாகக் கருதுகிறேன். தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்குவோம். இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காப்பாற்றுவோம்.

Tags : Tamil Nadu ,Chief Minister ,MK Stalin , My goal is to make Tamil Nadu a premier state, avoid banner, lavish celebrations on my birthday: Chief Minister M K Stalin appeals to volunteers
× RELATED பிறந்தநாள் வாழ்த்து கூறிய...