சென்னை: ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துமனையில், முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில், குணமடைந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மணி என்பவரை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்திமலர், ரெலா நிறுவனம் மற்றும் மருத்துவ மையத்தின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் முகமது ரெலா, சென்னை மரத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையரகத்தின் உறுப்பினர் செயலாளர் காந்திமதி மற்றும் துறை சார்ந்த மருத்துவர்கள் உடனிருந்தனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: ராஜீவ்காந்தி மருத்துவமனை மற்றும் குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையும் இணைந்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்தாண்டு கையெழுத்தானது. அதன்படி ₹4 கோடி செலவில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக அறுவை சிகிச்சை அரங்கம் தயார் செய்யப்பட்டது. அதிநவீன மருத்துவ உபகரணங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு அறுவை சிகிச்சை அரங்கத்தில் பொறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மணி என்பவருக்கு முதல் முறையாக வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
